|
இவ்வாறு
பலரும் புலம்பி வருந்த அரிச்சந்திரன் தன் மனைவியைக்
கட்டிய கயிற்றைப் பிடித்திழுத்துக்கொண்டு தெருக்களைக் கடந்து
கோட்டையின் வெளிப்புறம்வந்து தங்கினான் என்பது.
(122)
| |
விண்ணுலகில்
இந்திரனுக்கு வசிட்டர் கூறியது |
| 1099. |
உற்ற
நாளையில் வசிட்டனவ் வும்பர்கோன் தனக்குக்
கொற்றவா நினக்கு யான்புகல் கோதிலான் இடத்தே
அற்றை நாள்முதல் கௌசிகன் அமைக்குமூ றனைத்தும்
இற்றை நாள்விடும் காண்பம்நீ எழுகவென் றிசைத்தான். |
(இ - ள்.) உற்ற நாளையில் -
அரிச்சந்திரன் மதிற்புறத்தை
அடைந்த போதில், வசிட்டன் அ உம்பர் கோன் தனக்கு - வசிட்ட
முனிவன் அந்த இந்திரனைப் பார்த்து, கொற்றவா நினக்கு யான் புகல்
கோதிலான் இடத்தே - மன்னனே! உனக்கு யான் கூறிய குற்றம் இல்லாத
அரிச்சந்திரனிடத்தே, அற்றை நாள் முதல் கௌசிகன் அமைக்கும் ஊறு
அனைத்தும் - அன்று முதலாகக் கௌசிகன் செய்து வந்த துன்பங்கள்
எல்லாம், இற்றை நாள் விடும் - இன்று நீங்கிவிடும், காண்பம் நீ எழுக
என்று இசைத்தான் - அதனைக் காண்போம் புறப்பட்டு வருக என்று
கூறினான்.
வசிட்டன் இந்திரனை நோக்கி, "முன்னாளில் யான்
'குற்றமில்லாதவன் அரிச்சந்திரன்' என்று கூறினேன்; அவனைக்
குற்றமுள்ளவ னாக்குவதற்குக் கோசிகன் பலவிதமான இடையூறு
செய்தான்; அவை எல்லாம் நீங்கிடும் நாள் இந்நாள் ஆகும். அதனைக்
காண்பதற்கு வருக" என்று கூறினன்.
(123)
| |
மேலுலகத்தாரனைவரும்
நின்று அரிச்சந்திரன்
செயல்
காண்டல் |
| 1100. |
தாழும்
வார்சடை மாமுனி அவ்வுரை சாற்றச்
சூழும் மாதரும் தும்புரு நாரதர் தாமும்
வாழும் வச்சிர பாணியும் வசிட்டனும் யாரும்
ஏழு பாலரும் காணவந்(து) அந்தரத் திருந்தார். |
(இ
- ள்.) தாழும் வார் சடை மாமுனி அவ்வுரை சாற்ற -
தாழ்ந்து நீண்டுள்ள சடையினையுடைய வசிட்டமாமுனிவன்
அவ்வுரைகளைச் சொன்னவுடன், சூழும் மாதரும் தும்புரு நாரதர் தாமும்
- சூழ்ந்துள்ள அரம்பையர்களும் தும்புரு நாரதர் என்னும் முனிவர்களும்,
வாழும் வச்சிர பாணியும் - வளம்பெற்று வாழ்கின்ற வச்சிரப்
படையினையுடைய இந்திரனும், வசிட்டனும் யாரும் ஏழு பாலரும் -
வசிட்டமுனிவரும் மற்றவர்களும் ஏழு திசைக் காவலரும், காண வந்து
அந்தரத்து இருந்தார் - காண்பதற்காக வந்து வானத்திலே தங்கி
இருந்தார்கள்.
|