பக்கம் எண் :


535

     எட்டுத் திசைகளிலும் எட்டுக் காவலர் இருப்பர்; அவர்களில்
கிழக்குத்திசைக் காவலனாகிய இந்திரனை முதலிற் கூறியதனால் எஞ்சிய
எழுவரை 'ஏழு பாலர்' என்றார் மற்றை எழுவர்: அக்கினி, இயமன், நிருதி,
வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்போர். ஏழு என்பது
ஆகுபெயராய்த் திசைகளை யுணர்த்தியது. பாலர் - காப்பவர்.
                                                   (124)

 
      விசுவாமித்திரன் வந்து கூறுவது
1101. அந்த வேளையிற் கௌசிகன் விரைந்துவந் தரசே
இந்த நோதக வெய்தலென் எனக்குநீ முன்னம்
தந்த நாடியான் தந்திலேன் எனுமொழி சாற்றி
உய்ந்து நாடுமிவ் வுயிர்களும் பெறுகென உரைத்தான்.

     (இ - ள்.) அந்த வேளையில் கௌசிகன் விரைந்து வந்து - அந்த
நேரத்தில் கௌசிகன் என்னும் முனிவன் விரைவாக வந்து, அரசே இந்த
நோதகவு எய்தல் என் - அரசே! இந்தத் துன்பத்தை அடைவதற்குக்
காரணம் என்ன?, எனக்கு நீ முன்னம் தந்த நாடு யான் தந்திலேன்
எனும் மொழி சாற்றி - எனக்கு நீ முன்பு கொடுத்த நாட்டை நான்
கொடுக்கவில்லை என்ற மொழியினைக் கூறி, உய்ந்து நாடும்
இவ்வுயிர்களும் பெறுக என உரைத்தான் - தப்பிப் பிழைத்து நாட்டையும்
இவ்வுயிர்களையும் பெற்றுக்கொள்வாய் என்று கூறினான்.

     இவ்வுயிர்கள் - தேவதாசன், சந்திரமதி என்னும் இவருடைய உயிர்.
நாடு + யான் - நாடியான் : குற்றியலுகரம் இகரமாயிற்று. பெறுக + என -
பெறுகென : தொகுத்தல் விகாரம்.
                                                   (125)

 
1102. சேர நின்றவன் செப்பிய தாங்கவர் அன்றி
யாருங் கேட்டிலர் வசிட்டனும் அமரரும் அறிந்தார்
வீர வேந்தனும் மங்கையும் அவனடி வீழ்ந்திங்(கு)
யாரை நீஇந்த ஏழைமைக் காட்செய்தி என்றார்.

     (இ - ள்.) சேர நின்றவன் செப்பியது - அருகில் வந்து நின்று
விசுவாமித்திரன் கூறிய வார்த்தைகளை, ஆங்கு அவர் அன்றி யாரும்
கேட்டிலர் - அங்கு அவர்களை அல்லாமல் வேறு யாரும் கேட்கவில்லை,
வசிட்டனும் அமரரும் அறிந்தார் - வசிட்ட முனிவனும் தேவருமே
அறிந்தனர், வீர வேந்தனும் மங்கையும் அவனடி வீழ்ந்து - வீரத்
திறனுடைய மன்னனும் சந்திரமதியும் முனிவன் கால்களிலே விழுந்து,
இங்கு யாரை நீ இந்த ஏழைமைக்கு ஆட்செய்தி என்றார் - இங்கு யாரை
நீ இந்த அறிவற்ற செயலுக்கு ஆட்படுத்துகின்றாய் என்றனர்.

     ஏழைமை - அறிவில்லாமை. முனிவர் பேசும் மறைமொழி பிறர்
அறியாமற் பேசுவது உண்டு. தவமுதிர்ச்சி உடையராதலின், தேவரும்
வசிட்டமுனிவரும் அறிந்தனர்.
                                                   (126)