பக்கம் எண் :


537

ஏற்றபடி கூறுகின்ற, மும்மையும் தரும் முறையுடைத்து எனும் நிலை
முரணி - மூன்று இன்பங்களையும் தரும் முறைமை உடையது சத்தியம்
என்னும் நிலையினின்று மாறுபட்டு, எம்மை ஆழ் வயிற்று அடக்கி மீட்டு
உமிழ்கிலா - எம்மை ஆழமான வயிற்றிலே அடக்கிக்கொண்டு மீளவும்
உமிழாத, எரி வாய் வெம்மை கூர் நரகு உய்க்கினும் மெய்ம்மையை
விடேமால் - கொடுமைவாய்ந்த எரிவாய் நரகத்தில் செலுத்தி எங்களைத்
துன்புறுத்தினாலும் உண்மை பேசுவதை நாங்கள் கைவிடமாட்டோம்
(என்றனர்.)

     "சத்தியம் பேசுவார் நரகத்திற் சேரார்" என்று வேதங்கள் கூறும்
என அறிஞர் யாவரும் கூறுவர். 'அம்முறை மாறிச் சத்தியந் தவறாத
எங்களை அது நரகத்திற் செலுத்தித் துன்புறுத்தினாலும் அச் சத்தியத்தைக்
கைவிடோம்' என்று உறுதி கூறினர்.
                                                   (129)

 
1106. பதிஇ ழந்தனம் பாலனை இழந்தனம் படைத்த
நிதிஇ ழந்தனம் இனிநமக் குளதென நினைக்கும்
கதிஇ ழக்கினும் கட்டுரை இழக்கிலேம் என்றார்
மதிஇ ழந்துதன் வாயிழந்(து) அருந்தவன் மறைந்தான்.

       (இ - ள்.) பதி இழந்தனம் பாலனை இழந்தனம் படைத்த நிதி
இழந்தனம் - ஊரை இழந்துவிட்டோம் மகனை இழந்துவிட்டோம்
அடைந்திருந்த செல்வத்தை இழந்துவிட்டோம், இனி நமக்கு உளது என
நினைக்கும் கதி இழக்கினும் - இனி நமக்குக் கிடைக்கும் என
நினைக்கின்ற மேற்பதவிகளை இழந்தாலும், கட்டுரை இழக்கிலேம் என்றார்
- கொன்னவுரை தவறமாட்டோம் என்றனர், அருந்தவன் - அரிய
தவத்தையுடைய விசுவாமித்திர முனிவன், மதி இழந்து தன் வாய் இழந்து
மறைந்தான் - தன் அறிவையும் இழந்து மேல் பேசுவதற்கு வாய்மொழியும்
எழாமல் மறைந்து சென்றான்.

     'என்ன கேடு வரினும் சத்தியம் தவறமாட்டோம்! எங்கட்கு நற்கதி
கிடைக்கும் என எண்ணுகின்றோம்! அதுவும் கிடைக்காமற் போயினும்
வருந்தமாட்டோம்' என்றனர். உடனே முனிவன் மறைந்தான்.
                                                   (130)

 
      விசுவாமித்திரன் மீண்டு போதல்
1107. மறைந்து போகலும் வாசவன் மாமுனி வனைக்கூய்
அறைந்த காரணம் அறிந்துபோம் எனஅரு கழைத்தான்
நிறைந்த நாணமும் குறைந்த பார்வையு முறநினைவு
குறைந்தி ருந்தனன் முகிலிடத் தவருடன் கூடி.

     (இ - ள்.) மறைந்து போகலும் வாசவன் மா முனிவனைக் கூய் -
முனிவன் மறைந்து சென்றபோது இந்திரன் அவனை அழைத்து, அறைந்த
காரணம் அறிந்து போம் என அருகு அழைத்தான் - நீர் முன்பு சொன்ன
மொழிகள் முழுவதும் நிறைவேறுவதை அறிந்து பிறகு போம் என்று
அருகிலே அழைத்தான், நிறைந்த நாணமும் குறைந்த பார்வையும் உற -
நிறைந்த வெட்கமும் குறைந்த அடக்கமான பார்வையும் பொருந்த,