பக்கம் எண் :


538

முகிலிடத்து அவருடன் கூடி - மேகத்தினிடம் அவர்களுடன் சேர்ந்து,
நினைவு குறைந்திருந்தனன் - மேற்கொண்டு நினைக்கும் எண்ணம் சிறிதும்
இல்லாதவனாக இருந்தான்.

     அவ்வாறு மறைந்துசென்ற கோசிகனை இந்திரன் அழைத்தான். 'நீர்
கூறிய உரையின் முடிவு கண்டு போவீர்!' என்று கூற, நாணத்துடன்
அவ்விந்திரனுடன் கூடியிருந்தான்.
                                                   (131)

 
1108. வாசத் தார்புனை வாசவ னுடன்முனி வைகப்
பாசத் தாள்கரம் பிணித்ததோர் பான்மையிற் பற்றிப்
பேசத் தான்பெறான் பிணஞ்சுடு கோலினால் தள்ளி
நேசத் தார்மகன் கிடந்ததோர் நெடுநிலம் உற்றான்.

       (இ - ள்.) வாசம் தார் புனை வாசவனுடன் முனி வைக -
மணம் வீசும் மாலை அணிந்த இந்திரனுடன் முனிவன் தங்கி இருக்க,
பாசத்தாள் கரம் பிணித்ததோர் பான்மையின் பற்றி - அன்புடையவள்
ஆகிய சந்திரமதியின் கைகளைக் கட்டிய தன்மையோடு பிடித்துக்
கொண்டு, பேசத்தான் பெறான் பிணம் சுடு கோலினால் தள்ளி - பேச
முடியாதவனாய்ப் பிணங்களைச் சுடுகின்ற கோலினாலே தள்ளிக்
கொண்டு, நேசத்த ஆர் மகன் கிடந்ததோர் நெடு நிலம் உற்றான் -
அன்பு பொருந்திய தன் மகன் கிடக்கின்ற சுடுகாட்டை மன்னன்
அடைந்தான்.

     கொலை செய்யக் கொண்டு செல்கின்றான் தன் கணவன் என்பது
அறிந்த அந்நிலைமையினும் அவன்மேல் அன்புடையவளாகவே இருந்தாள்
என்பது தோன்ற, 'பாசத்தாள்' என்றார். 'கொலைகாரியுடன் பேசினால்
ஊரிலுள்ளவர் தன்னை இகழ்வார்' என்று கருதி, ஒன்றும் பேசாமற்
சென்றான் என்பார் 'பேசத்தான் பெறான்' என்றார்.
                                                   (132)

 
     கொலை செய்யும் அமயம் இருவரும் கூறுவது
1109. வழக்கின் என்றும்நீ வழிபடு தெய்வத்தை வணங்கிக்
கிழக்கு நோக்கியீண் டிருஎனக் கிளிமொழி மடந்தை
பழக்க மானஅக் கணவனைப் பரவிஎன் ஆவி
இழக்கற் கஞ்சிநீ அறம்வழு வேலென இயம்பும்.

     (இ - ள்.) வழக்கின் என்றும் நீ வழிபடு தெய்வத்தை வணங்கி -
வழக்கமாக எந்நாளும் நீ வழிபடுகின்ற தெய்வத்தை வணங்கி, கிழக்கு
நோக்கி ஈண்டு இரு என - கிழக்குமுகமாகப் பார்த்து நீ இங்கு இரு
என்று மன்னன் சொல்ல, கிளி மொழி மடந்தை - கிளி போன்ற மொழி
பேசும் அப் பெண், பழக்கமான அக் கணவனைப் பரவி - பழக்கமாக
வணங்கும் முறைப்படி அக் கணவனை வணங்கி, என் ஆவி இழக்கற்கு
அஞ்சி நீ அறம் வழுவேல் என இயம்பும் - என் உயிரை இழப்பதற்குப்
பயந்து நீ அறத்தினின்றும் தளறவேண்டா எனக் கூறினாள்.

     "குல மகட்குத் தெய்வம் கொழுநனே" என்றபடி. தன் கணவனையே
சந்திரமதி வழிபட்டாள், "தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுது