பக்கம் எண் :


539

எழுவாள்" என்பது திருக்குறள். இதனால் சந்திரமதி தன் கணவனையே
குலதெய்வமாகக் கொண்டு வணங்கினள் எனக் கொள்க.
                                                   (133)

 
1110. பொருந்து நீத்தத்திற் புற்புத வாழ்வைநீ மெய்யென்(று)
அருந்த வத்தையும் அறத்தையும் மெய்யையும் விடுத்து
வருந்தல் மன்னவ வழிவழி சிறக்கென வாழ்த்தி
இருந்த பின்சுடர் வாட்படை வலக்கையில் எடுத்தான்.

       (இ - ள்.) பொருந்தும் நீத்தத்தில் புற்புத வாழ்வை நீ
மெய்யென்று - பொருந்திய தண்ணீரில் தோன்றும் குமிழியைப் போன்ற
நிலையற்ற வாழ்வை நீ உண்மையென்று கருதி, அருந்தவத்தையும்
அறத்தையும் மெய்யையும் விடுத்து - அருமையான தவத்தையும்
தருமத்தையும் உண்மையையும் விட்டுவிட்டு, வருந்தல் மன்னவ -
மன்னவனே! வருந்தாதே, வழிவழி சிறக்க என வாழ்த்தி - நீ மரபு
வழிவழியாகச் சிறப்புப்பெற்று வாழ்வாயாக என்று வாழ்த்தி, இருந்த பின்
- கிழக்குமுகமாக நின்றபின், சுடர் வாட்படை வலக் கையின் எடுத்தான்
- ஒளி வீசும் வாட்படையை வலக்கையிலே மன்னன் எடுத்தான்.

     சந்திரமதி 'உலகவாழ்வை நிலையாகக் கருதி மயங்காமல் அறமும்
வாய்மையும் தவறாது என்னை வெட்டுக!' என்று கூறி, 'வழிவழி சிறக்க'
என வாழ்த்தி அமர்ந்தாள். மன்னன் வலக்கரத்தில் வாள் எடுத்தான்
என்பது.
                                                   (134)

 
  அரிச்சந்திரன் கடவுளைத் துதித்தப் பின் வெட்டுதல்   
1111. உலகு யிர்க்கெலாம் பசுபதி ஒருமுதல் ஆயின்
அலகில் சீருடை அவன்மொழி மறையெனின் அதன்கண்
இலக றம்பல வற்றினும் வாய்மையீ டிலதேல்
விலகு றாமலவ் வாய்மையை விரதமாக் கொளின்யான்.

     (இ - ள்.) உலகு உயிர்க் கெலாம் பசுபதி ஒரு முதல் ஆயின் -
உலகத்தில் உள்ள உயிர்களுக்கெல்லாம் சிவபெருமான் ஒரு முதற்
கடவுள் என்பது உண்மையானால், அலகில் சீர் உடை அவன் மொழி
மறை எனில் - அளவில்லாத சிறப்பினையுடைய அவன் மொழிந்த நூலே
மறை நூல் என்பது உண்மையானால், அதன்கண் இலகு அறம்
பலவற்றினும் வாய்மை ஈடு இலதேல் - அதன்கண் விளங்குகின்ற
அறங்கள் பலவற்றினும் உண்மை பேசுதலே ஒப்பில்லாத அறம் என்றால்,
விலகுறாமல் அவ் வாய்மையை விரதமாக் கொளின் யான் - நீங்காமல்
அவ்வுண்மை பேசுதலை நான் விரதமாகக் கொண்டால்,

     பசுபதி - உயிர்கட்குத் தலைவன் (சிவன்) 'சிவனே எவ்வுயிர்க்கும்
இறைவன்! அவனாற் கூறப்பட்டதே மறைகள்! அம் மறையிற் கூறும்
அறங்களிற் சிறந்தது வாய்மையே! அவ்வாய்மையை நான் விரதமாகக்
கொண்டவனானால்' என்பது. இது அடுத்த கவியிற் சென்று முடியும்.
                                                   (135)