பக்கம் எண் :


540

    வாளாயுதம் மணமாலையாய்க் கழுத்தில் விழுதல்   
1112. நெறியின் அன்னவென் றனைவிடா நிறையிவட் குளதேல்
இறுதி யின்மையைப் பெறுகவில் லெனின்இவள் இறுதி
பெறுக என்றுவாள் வீசினன் பேதைதன் கழுத்தில்
மறும ணத்திடும் மாலையாய் வீழ்ந்ததவ் வடிவாள்.

     (இ - ள்.) நெறியின் அன்ன என்றனை விடா நிறை இவட்கு
உளதேல் - நல்ல நெறியில் நிற்கின்ற அத்தகைய என்னை விட்டு நீங்காத
நிறை இவளுக்கு இருக்குமானால், இறுதியின்மையைப் பெறுக - இவள்
இறவாமல் இருப்பாளாக, இல் எனில் இவள் இறுதி பெறுக -
இல்லையானால் இவள் முடிவு பெறுக, என்று வாள் வீசினன் - என்று
சொல்லி வாளை எடுத்து வீசினான், அவ் வடி வாள் பேதை தன் கழுத்தில்
மறு மணத்திடும் மாலையாய் வீழ்ந்தது - அந்தக் கூர்மையான வாளானது
அப் பெண்ணின் கழுத்தில் மறுமணஞ் செய்யும் போது இடுகின்ற
மாலையாக விழுந்தது.

     'நான் வாய்மையை விரதமாகக் கொண்டவனானால், இவள்
என்னையன்றி எவரையும் விரும்பா நிறையுடையவளாயின் இறவாது நிலை
பெறுக! இல்லையேல், இவள் இறந்தொழிக!' என்று எண்ணி வாளால்
வெட்டினான். அவ் வாள் அவள் கழுத்தில் மாலையாய் விழுந்து கிடந்தது.
                                                   (136)

               மயான காண்டம் முற்றிற்று.