பக்கம் எண் :


541

9. மீட்சிக் காண்டம்
 

   [அரிச்சந்திரன், சந்திரமதி, தேவதாசன், சத்தியகீர்த்தி இவர்களுடன்
          சிவபெருமான் ஆணையால் மீண்டு வந்து முடிசூடி
                அரசுபுரிந்ததைக் கூறும் பகுதி இது.]

       சந்திரமதி இறத்தலின்றிச் சிறத்தல்
1113. படத்த காதபா டியாவையும் பட்டுளத் தழுத்தும்
திடத்தி னின்றுவாள் வெட்டினிற் பிழைத்தடு செந்தீப்
புடத்தி னின்றுமாற் றுயர்ந்தசெம் பொன்னெனப் பொலிந்தாள்
மடத்தில் தீர்ந்தொளிர் சந்திர வதியெனும் அணங்கு.

       (இ - ள்.) மடத்தில் தீர்ந்து ஒளிர் சந்திரவதி எனும் அணங்கு
- அறியாமையினின்றும் நீங்கி விளங்குகின்ற சந்திரவதி என்னும் பெண்,
படத் தகாத பாடு யாவையும் பட்டு - படமுடியாத துன்பங்களையெல்லாம்
பட்டு, உளத்து அழுத்தும் திடத்தினின்று - உள்ளத்தில் பதிந்த
உறுதிப்பாட்டில் நின்று, வாள் வெட்டினில் பிழைத்து - வெட்டிய வாள்
வெட்டின் நின்று நீங்கி, அடு செழுந் தீப் புடத்தின் நின்று மாற்று உயர்ந்த
செம்பொன் எனப் பொலிந்தாள் - எரிகின்ற செந்தீயினுடைய
புடத்திலிருந்து வந்த மாற்று உயர்ந்த செம்பொன்னைப்போல
விளங்கினாள்.

     தீயிற் சுடப்பட்ட பொன் மாசற்று விளங்குவதுபோலக் கோசிக
முனிவன் இழைத்த கொடுந்துயரிலழுந்தி, முடிவிற் கொலையுண்டிறவாது
முன்னிலும் சிறந்த வனப்புடன் நின்றாள் சந்திரமதி என்பது. இஃது
உவமையணி.
                                                     (1)

 
1114. சடைபட் டோங்கிய முடிமுனி தனதுசூழ் வினையால்
அடைபட் டுறுபாடு அனைத்தையும் கடந்துசா ணையினால்
கடைபட் டானபின் செழுமணி யெனவொளி காட்டிக்
கொடைபட் டார்புகழ்க் கோமகன் விளங்கினன் குணத்தால்.

     (இ - ள்.) சடை பட்டு ஓங்கிய முடி முனி தனது சூழ் வினையால்
- நீண்ட சடையையுடைய உயர்ந்த முடியினையுடைய விசுவாமித்திரனின்
சூழ்ச்சி வினைகள், அடைபட்டு - அடையப்பட்டு, ஊறு பாடு
அனைத்தையும் கடந்து - துன்பங்கள் எல்லாவற்றையும் கடந்து,
சாணையினால் கடை பட்டு ஆன பின் செழு மணி என - சாணையினால்
கடையப்பட்டபின் விளங்கும் செழுமையான மாணிக்கக் கல் போல, ஒளி
காட்டி - விளங்கி, கொடை பட்டு ஆர் புகழ் கோமகன் குணத்தால்
விளங்கினன் - கொடைத்தன்மையால் புகழ்பெற்று விளங்கும் மன்னன்
குணத்தாலும் ஒளிபெற்று விளங்கினான்.