பக்கம் எண் :


542

     சாணையிற் கடைந்த மணி எவ்வாறு ஒளிபெற்று விளங்குமோ,
அதுபோலக் கோசிகனாற் கொடுந்துயரிழைக்கப்பட்டு அவற்றினின்றும்
ஒருவாறு நீங்கி ஒளியுடன் நின்றான் அரிச்சந்திரன் என்பது. இதுவும்
உவமையணி.
                                                     (2)

 
    விண்ணவர் மண்ணவர் எல்லோரும் வந்து கூடுதல்
1115. புலத்தின் மாட்சிகொள் பொலங்கொடி படரவோங் கரசு
குலத்தின் மாட்சியும் குணத்தின்மாட் சியும்குறை வறுசீர்
நலத்தின் மாட்சியும் வாய்மைமாட் சியும்நனி மலர
நிலத்தின் மாட்சிகொள் காட்சியின் நேர்ந்தனர் பலரும்.

       (இ - ள்.) புலத்தின் மாட்சி கொள் பொலங்கொடி படர ஓங்கு
அரசு - அறிவினால் பெருமைபெற்ற பொன்கொடி என்னும் சந்திரமதி
படர்ந்து வளர ஓங்கி நிற்கும் அரசு போன்ற அரிச்சந்திரனுடைய,
குலத்தின் மாட்சியும் குணத்தின் மாட்சியும் - குலத்தின் பெருமையும்
குணத்தின் பெருமையும், குறைவறு சீர் நலத்தின் மாட்சியும் வாய்மை
மாட்சியும் நனி மலர - குறைவற்ற சிறப்புடைய நன்மைகளின் பெருமையும்
உண்மைத்தன்மையின் பெருமையும் மலர்ச்சி பெற்று விளங்க, நிலத்தின்
மாட்சிகொள் காட்சியின் நேர்ந்தனர் பலரும் - இந்த நிலத்தின் பெருமை
கொண்ட காட்சியைக் காணப் பலரும் நேரில் வந்தனர்.

     சந்திரமதி பொற்கொடிபோல நின்றாள், அரிச்சந்திரன் அக் கொடி
படர அதனருகுநின்ற கொம்புபோல நின்றான். குலப்பெருமை,
குணப்பெருமை, நல்ல புகழ்ப்பெருமை, சத்தியத்தின் பெருமை இவை
பூப்போல மலர்ந்து விளங்கின. அச் சுடலையாகிய நிலத்தின்
பெருமையைப் பலரும் காண வந்து கூடினர் என்க.
                                                     (3)

 
1116. வண்டி ருந்ததார் வல்லியைச் சூட்டலும் வானிற்
கண்டி ருந்தவர் மதித்தனர் குதித்தனர் களித்தார்
மண்ட லத்திழிந் தீண்டினர் வயிரவாட் படைகைக்
கொண்டி ருந்தவக் குரிசிலும் மகிழ்ச்சியிற் குளித்தான்.

     (இ - ள்.) வண்டு இருந்த தார் வல்லியைச் சூட்டலும் - வண்டுகள்
மொய்க்கும் மாலையானது சந்திரமதி கழுத்தில் வளைந்து கிடந்த போது,
வானில் கண்டிருந்தவர் மதித்தனர் குதித்தனர் களித்தார் -
வானத்திலிருந்து கண்டிருந்த தேவர்கள் மதித்துப் பாராட்டினர் குதித்தனர்
மகிழ்ச்சியடைந்தனர், மண்டலத்து இழிந்து ஈண்டினர் -
வானமண்டலத்திலிருந்து இறங்கிவந்து கூடினர், வயிர வாள் படை கைக்
கொண்டிருந்த அக் குரிசிலும் மகிழ்ச்சியிற் குளித்தான் - வச்சிராயுதத்தைக்
கையிற் கொண்ட இந்திரனும் மகிழ்ச்சியில் முழுகினான்.

     வெட்டிய வாளானது பூமாலையாய்ச் சந்திரமதி கழுத்திற் கிடந்த
போது வானோர் மண்ணோராக வந்து கூடினர்; இந்திரன் மகிழ்ச்சி
யடைந்தான்.
                                                     (4)