பக்கம் எண் :


543

     கோசிகன் மகிழ்ந்து கூத்தாடிக் கூறுதல்   
1117. என்ற னால்இவன் குணமெலாம் விளங்கிடின் எனைப்போல்
நன்றி யார்செய்தார் இவற்கென நகைமுகம் மலர்ந்து
துன்று வார்சடை சுவன்மிசைச் சுழன்றுவீழ்ந் தாட
வென்று ளான்எனக் கௌசிகன் ஆடினன் விழைந்து.

     (இ - ள்.) என்றனால் இவன் குணமெலாம் விளங்கிடின் -
என்னால் இவனுடைய மேன்மைக்குணங்கள் எல்லாம் உலகத்தார்க்கு
விளங்கியதனால், எனைப் போல் இவற்கு நன்றி யார் செய்தார் என நகை
முகம் மலர்ந்து - என்னைப்போல இவனுக்கு நன்றி செய்தவர் வேறு யார்
என்று முகம் மலர்ந்து சிரித்து, துன்று வார் சடை சுவல் மிசைச் சுழன்று
வீழ்ந்து ஆட - நெருங்கிய நீண்ட சடை தோளின்மேல் கிடந்து சுழன்று
வீழ்ந்து ஆடும்படி, வென்றுளான் எனக் கௌசிகன் ஆடினன் விரைந்து
- வெற்றி பெற்றவன் போலக் கௌசிகன் விரைந்து ஆடினான்.

     அப்போது கௌசிகன் ஆங்கு வந்து 'என்னால் இவ்வுலகில் இவன்
வாய்மை முதலிய தூய்மைப் பண்புடையவன் எனப் புகழ்பெற்றனன்;
என்னைப்போல நன்றி செய்தவர் யார்?' என்று கூறி, வென்றவன் போலச்
சடை சுழல ஆடினன். முதலிற் பொய்யன் எனக் கூறியதால்
தோல்வியுற்றவனாவன் கோசிகன். இப்பொழுது வென்றவன்போல வந்து
நின்றனன் எனக் கொள்க.
                                                     (5)

 
              வசிட்டன் மகிழ்ச்சி
1118. வாடி நாள்தொறும் வருந்திய வசிட்டன்மெய்ப் புளகம்
மூடி னான்மிகக் காலங்கள் மூன்றையும் உணர்ந்தும்
ஆடி னான்உயர்ந் தானயர்ந் தான்றனை யறியா(து)
ஓடி னான்மகிழ்ந் துவகையங் கடல்குளித் துறைந்தான்.

       (இ - ள்.) வாடி நாள்தொறும் வருந்திய வசிட்டன் - வாட்டங்
கொண்டு நாள்தோறும் வருந்திக்கிடந்த வசிட்டமுனிவன், மெய்ப் புளகம்
மூடினான் - உடம்பில் மகிழ்ச்சியால் புளகங்கொண்டான், மிகக் காலங்கள்
மூன்றையும் உணர்ந்தும் ஆடினான் - மூன்று காலங்களையும் முன்னரே
அறிந்திருந்தும் மகிழ்ச்சியால் ஆடினான், உயர்ந்தான் தனை அறியாது
அயர்ந்தான் - உயரமாக எழுந்து நின்றான் தன்னை அறியாது
மயங்கினான், மகிழ்ந்து ஓடினான் - மகிழ்ச்சிகொண்டு ஓடினான்,
உவகையங் கடல் குளித்து உறைந்தான் - மகிழ்ச்சிக் கடலிலே குளித்து
முழுகினான்.

     வசிட்டன் வஞ்சினங் கூறிய நாள் முதல் 'என் ஆமோ!' என்று
வருந்தியிருந்தான். இவ்வாறு வாய்மை தவறாது செயல் முடிவுற்ற போது
எல்லையற்ற மகிழ்ச்சி எய்தினான் என்க.
                                                     (6)