பக்கம் எண் :


544

      சிவபெருமான் உமையுடன் வருதல்
1119. அடைய வானவர் திரண்டது திருவுளத் தடைத்துப்
புடையி லங்கிய மைந்தரோ ரிருவரும் பொருந்தத்
தொடையி லங்கிய சடைமுடி முறைமுறை துளக்கி
விடையி லேறிவந் துமையுடன் தோன்றினன் விமலன்.

     (இ - ள்.) விமலன் - சிவபெருமான், வானவர் அடையத் திரண்டது
திருவுளத்து அடைத்து - வானவர் யாவரும் திரண்டு அங்கு வந்ததை
மனத்தில் நினைத்து, புடை இலங்கிய மைந்தர் ஓர் இருவரும் பொருந்த -
பக்கத்தில் தங்கிய மைந்தர் இருவரும் விளங்க, தொடை இலங்கிய
சடை முடி முறை முறை துளக்கி - மாலைகள் அணியப்பெற்று விளங்கும்
சடைமுடியினை முறைமுறையாக அசைத்து, விடையில் ஏறி வந்து
உமையுடன் தோன்றினன் - காளை வாகனத்தில் ஏறி வந்து
உமாதேவியாருடன் யாவரும் காண வானத்தில் விளங்கினான்.

     தேவர்கள் யாவரும் திரண்டு வந்து கூடியது திருவுளத்திற்குத்
தோன்றியவுடன் சிவபெருமான் மைந்தரிருவருடனும் உமையுடனும்
விடையூர்தியிலேறிவந்து நின்றனர். 'தொடை யிலங்கிய சடைமுடி துளக்கி'
என்றது மகிழ்ச்சிக்கறிகுறி என்று கொள்க.
                                                     (7)

 
             திருமால் வருதல்
1120. சிந்தி டும்படி யவுணர்தம் முடல்களைத் தேய்த்த
ஐந்து வெம்படை யடக்கிய கரம்எடுத் தமைத்து
சுந்த ரத்திருத் தோளிணை புளகமுற் றோங்க
வந்து தோன்றினன் வயினன்மேல் திருமறு மார்மன்.

     (இ - ள்.) திரு மறு மார்பன் - திருமகளையும் மச்சத்தையும்
மார்பிடத்தில் கொண்ட திருமால், அவுணர்தம் உடல்களை சிந்திடும்படி
தேய்த்த - அசுரருடைய உடல்கள் அழியும்படி தேய்த்த, ஐந்து வெம்படை
அடக்கிய கரம் எடுத்து அமைத்து - ஐந்து ஆயுதங்களையும் அடக்கிய
கையினை எடுத்து எல்லோரையும் அமரும்படி சொல்லி, சுந்தரத் திருத்
தோளிணை புளகமுற்று ஓங்க - அழகிய தோள்கள் இரண்டும்
புளகங்கொண்டு உயர, வயினன் மேல் வந்து தோன்றினன் - கருடன்மேல்
வந்து தோன்றினான்.

     திருமறு மார்பன் - திருமால். திரு - இலக்குமி. மறு - மச்சம்.
திருவையும் மறுவையும் கொண்ட மார்புடையவன். வயினன் - கருடன்.
ஐந்து படையாவன : வில், வாள், கதை, சங்கு, சக்கரம். திருமாலும் அங்கு
வந்து சேர்ந்தனன்.
                                                     (8)

 
       பிரமனும் தேவரும் யாவரும் வருதல்
1121. தாதின் தோன்றிய தண்டுழாய்த் தார்முகில் நாபிப்
போதில் தோன்றிய நான்முகத் தொருதனிப் புத்தேள்
ஓதில் தோன்றிய வாணியோ டோதிமப் புள்ளின்
மீதில் தோன்றினன் விண்ணவர் யாவரும் வந்தார்.