பக்கம் எண் :


54

குளகம். இக்கவியில் அளப்ப, உரைப்ப, இயம்ப என்ற எச்சங்கள்
அடுத்துவருங் கவிகளில் உள்ள எச்சங்களுடன் சேர்ந்து இருந்தான்
(31, கவி இறுதி) என்ற முற்றுடன் முடியும்.
                                                    (23)

 
97. முந்தைஇர விக்குல முதற்றலைமை யோடும்
வந்தகுல மந்திரிகண் மண்டலிகர் சூழச்
சந்திர முகத்தமணி யக்கனத னத்துச்
சுந்தர மடந்தையர் சுழற்றிபணி மாற;

     (இ - ள்.) முந்தை இரவிக் குல முதல் தலைமையோடும் வந்த
குல மந்திரிகள் மண்டலிகர் சூழ - பழமையான சூரியகுலந்தோன்றியது
முதல் முதன்மைதாங்கிவந்த குலமந்திரிகளும் மண்டல ஆட்சியாளரும்
ஒருபுறம் சூழ்ந்திருக்கவும், சந்திரமுக தமனியக் கனதனத்து சுந்தர
மடந்தையர் சுழற்றி பணி மாற - சந்திரன்போன்ற முகமும் பொன்போன்ற
தேமற்படர்ந்த கனமான கொங்கைகளும் உடைய அழகிய பெண்கள்
வெண்சாமரையால் வீசி ஏனைய பணிகளும் செய்து நிற்க.

     முந்தை - ஐ : சாரியை; மண்டலிகர் - நூறு யோசனைப் பரப்பு நிலம்
ஆள்பவர். சூழ, பணி மாற இருந்தான் (31, கவி) என முடியும்.
                                                    (24)

 
98. ஆடக மணிக்கடக கைத்தலம் அழுந்த
மாடக முறுக்கு மடந்தையர்கள் பாடப்
பாடக பதப்பரி புரத்தொலிஎ ழுப்ப
நாடகம டந்தையர் அசைந்துநட மாட.

     (இ - ள்.) ஆடக மணிக் கடக கைத்தலம் அழுந்த - பொன்னாற்
செய்த மணிகள் பதித்த கங்கணங்கள் அணிந்த கையானது பதியும் படி,
மாடகம் முறுக்குபு - (வீணைகளிலுள்ள) முறுக்காணிகளை முறுக்கி,
மடந்தையர்கள் பாட - பெண்கள் பாடிக்கொண்டிருக்க, பாடக பதப்
பரிபுரத் தொலி எழும்ப - பாடகம் அணிந்த பாதங்களில் சிலம்பொலி
ஆர்ப்ப, நாடக மடந்தையர் அசைந்து நடமாட - நடனப் பெண்கள்
அசைந்து நடனம் ஆடவும் :

     முறுக்குபு : செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம். கைத்தலம் :
இருபெயரொட்டுப் பண்புத்தொகை. கையாகிய இடம். மாடகம் யாழ்
நரம்பினை முறுக்கும் ஆணி. பாடகம் - காலணிகளில் ஒன்று. பரிபுரம் -
சிலம்பு. மடந்தையர் பாட ஆட இருந்தான் (31, கவி) என முடிக்க.
                                                    (25)

 
99. ஆகமிசை தங்குமணி ஆரமும்அ வற்றின்
பாகமிசை சோதிவிரி பன்மணியும் மின்னக்
கோகனக மங்கையொடு கொற்றவையும் அம்பொன் வாகுவல யங்களும் மணிப்புயம்இ லங்க;