பக்கம் எண் :


546

பெரிய முனிவர்களும் இயக்கர் என்னும் கூட்டத்தாரும், மந்தரப் புயத்து
இரதி தோய் வேனில் வேள் மற்றோர் - மந்தர மலைபோன்ற தோள்களில்
இரதிதேவி சேர்கின்ற சிறப்புடைய வேனிற்காலத்துக்குரிய மன்மதனும்
மற்றவர்களும், அந்தரத்தினை மறைத்து வந்து ஆ வயின் அடைந்தார் -
வானத்தை மறைத்துவந்து அவ்விடத்தை அடைந்தார்கள்.

     சந்திரன் சூரியன் முதலிய தேவர்கள் யாவரும் வந்தனர் என்பது.
சத்தம் - ஏழு. மாதர் - பெண்கள். எழுவர் பெயர் : அபிராமி, மகேச்சுவரி,
கௌமாரி, நாராயணி, வசாகி, இந்திராணி, காளி என்பன. திக்குக் காவலர்
எண்மர் பெயர் : இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு,
குபேரன், ஈசானன் என்பன.
                                                    (11)

 
1124. கந்த ரத்தினில் வார்விசி முதுகுறக் கதுவ
மந்த ரப்புயம் ஆயிரம் உடையவோர் வாணன்
சுந்த ரக்கையால் முழக்கிடும் குடமுழாட் தொனியும்
அந்த ரச்செழும் துந்துமித் துழனியும் ஆர்க்க.

       (இ - ள்.) கந்தரத்தினில் வார் விசி முதுகுறக் கதுவ - கழுத்தில்
மாட்டிய தோல் இறுக்கமானது முதுகில் பதிந்து விளங்க, மந்தரப் புயம்
ஆயிரம் உடைய ஓர் வாணன் - மந்தரமலைபோன்ற தோள்கள் ஆயிரம்
உடைய வாணன் என்பவன், சுந்தரக் கையால் முழக்கிடும் குட முழாத்
தொனியும் - அழகிய கையினால் முழக்குகின்ற குடமுழா என்னும் இசைக்
கருவியின் ஒலியும், அந்தரச் செழும் துந்துமித் துழனியும் ஆர்க்க -
வானத்தில் வளமான துந்துமி என்னும் கருவியின் ஒலியும் பேரொலி
செய்ய.

     கந்தரம் - கழுத்த. வாணன் என்பவன் ஆயிரம் கைகளுடையவன்;
அவனால் முழக்கப்பட்ட குடமுழா வொலியுடன் அந்தர துந்துபி என்ற
முரசமும் ஒலித்தன.
                                                    (12)

 
1125. சின்னம் பேரிகை சல்லிகை செம்பொனின் காளம்
மின்னும் மாமுகில் இடியெனக் கடலென விம்மத்
துன்ன ரம்பையர் சொரிந்திடு கற்பகத் துணரும்
பொன்னின் நன்னெடும் பூக்களும் பொலிந்தன வன்றே.

     (இ - ள்.) சின்னம் பேரிகை சல்லிகை செம்பொனின் காளம் -
சின்னம் பேரிகை சல்லிகை செம்பொன்னால் செய்யப்பட்ட எக்காளம்
என்னும் கருவிகள், மின்னும் மாமுகில் இடி யெனக் கடலென விம்ம -
மின்னுகின்ற பெரிய மேகங்களின் இடி போலவும் கடல் போலவும்
பேரொலி செய்ய, துன் அரம்பையர் சொரிந்திடு கற்பகத் துணரும் -
நெருங்கிய அரம்பை மாதர்கள் பொழிகின்ற கற்பகப் பூங்கொத்துகளுடன்,
பொன்னின் நன்னெடும் பூக்களும் பொலிந்தன அன்றே -
பொன்னாலாகிய நல்ல மலர்களும் நிறைந்து விளங்கின.

     அரம்பையர் கற்பகமலர் சொரிந்தனர்; பொன் மலரும் சொரிந்தனர்;
சின்னம் பேரிகை முதலிய இயங்கள் இடியென முழங்கின என்க.
                                                    (13)