பக்கம் எண் :


547

1126. வந்த தேவரைக் கண்டரிச் சந்திரன் மகிழ்ந்தே
எந்த மாதவம் என்னையோ என்னையோ என்னாச்
சிந்தை யுட்பெருகு ஆனந்தப் பெருவெள்ளம் தேக்கி
புந்தி யாங்கரை பொடிபடப் புடைத்ததை யன்றே.

     (இ - ள்.) அரிச்சந்திரன் வந்த தேவரைக் கண்டு மகிழ்ந்தே -
அரிச்சந்திரன் அங்கு வந்த தேவர்களையெல்லாம் கண்டு மகிழ்ந்து,
எந்தம் மாதவம் என்னையோ என்னையோ என்னா - எங்களுடைய
பெரிய தவம் என்ன சிறப்புடையது! என்ன சிறப்புடையது! என்று,
சிந்தையுள் பெருகு ஆனந்தப் பெரு வெள்ளம் தேக்கி - மனத்தினுள்
பெருகிய மகிழ்ச்சி என்னும் பெருவெள்ளம் நிறைந்து, புந்தியாம் கரை
பொடி படப் புடைத்தது - புத்தி என்னும் பெரிய கரை பொடியாகும்படி
தாக்கியது.

     புடைத்ததை, ஐ : சாரியை. அன்று, ஏ : அசைநிலை. மகிழ்ச்சிப்
பெருக்கு புத்தியை அழிக்க முயன்றது என்பது, மன்னன் மகிழ்ச்சியால்
தன்னைமறந்தான் என்ற கருத்தை உணர்த்துகின்றது. சிந்தை ஒரு
பொய்கையாகவும், ஆனந்தம் நீராகவும், புந்தி கரையாகவும்
உருவகப்படுத்தப்பட்டது. இஃது உருவகவணி.
                                                    (14)

 
     அரிச்சந்திரன் வந்தவர்களை வணங்குதல்   
1127. தொழுத னன்றொழு தெழுந்தனன் அடிமுடி தொடங்கி
முழுதும் முற்றிய உவகையம் பெருங்கடல் மூழ்கிப்
புழுதி யாடினன் கருணையங் கண்ணினீர் பொழிய
அழுது வீழ்ந்தனன் செய்தவம் இன்னதென் றறியான்.

       (இ - ள்.) தொழுதனன் தொழுது எழுந்தனன் - அரிச்சந்திரன்
வணங்கினான் வணங்கி எழுந்தான், அடிமுடி தொடங்கி முழுதும் முற்றிய
உவகையம் பெருங் கடல் மூழ்கி - தன் அடி முதல் முடி வரை உடல்
முழுவதும் மகிழ்ச்சிக் கடலில் முழுகி, புழுதி ஆடினன் - தரையிலே
விழுந்து வணங்கித் தன் உடம்பெல்லாம் புழுதி படியும்படி செய்தான்,
கருணையம் கண்ணின் நீர் பொழிய அழுது வீழ்ந்தனன் செய் தவம்
இன்னதென்று அறியான் - கருணையோடுகூடிய கண்ணீர் வெள்ளம் சிந்த
அழுது வீழ்ந்தான் தான் செய்த தவத்தின் பெருமை யாது என்று அறியாது
இருந்தான்.

     அரிச்சந்திரன் மகிழ்ச்சிக் கடலில் முழுகினான். பின்பு தரையில்
விழுந்து புழுதியிற் புரண்டான்; கண்ணீர் வெள்ளம் பொழிய அழுது கீழே
வீழ்ந்தான்; ஒன்றும் அறியாமல் மயங்கினான் என்க.
                                                    (15)

 
1128. நாரி பாகனை முகுந்தனை நான்முகத் தோனை
மூரி வேலனை விநாயக மூர்த்தியைப் பணிந்தான்
பூரை பூரையென் றிருகையால் அமைத்தபுத் தேளிர்
யாரை யாரையென் றறிந்தியாம் விளம்புதும் அம்மா.