பக்கம் எண் :


551

     அரிச்சந்திரனும் சந்திரமதியும் காசி மன்னனும் அவர்தம் மக்கள்
இருவரும் களிப்படைந்தனர்; தேவரையும் மூவரையும் வணங்கினர்.
                                                        (22)

 
    மூவரும் அரிச்சந்திரனைப் புகழ்தல்
1135. மன்னர் மன்னனை நோக்கியே மலர்க்கரம் அமையா
என்னை யோவெனா உருகித்தந் திருவுளம் இரங்கி
முன்னை யுத்தமர் எவருளும் முறைமைக்கும் நெறிக்கும்
உன்னை ஒப்பவர் இலரென மூவரும் உரைத்தார்.

       (இ - ள்.) மன்னர் மன்னனை நோக்கியே மலர்க்கரம் அமையா
- மன்னர் மன்னனாகிய அரிச்சந்திரனைப் பார்த்து மும்மூர்த்திகளும் தம்
மலர்க்கரங்களால் அவனை அமரச்செய்து, என்னையோ எனா உருகி தம்
திருவுளம் இரங்கி - என்ன கடுமையான சோதனை என்று கூறி மனம்
உருகி இரக்கங்கொண்டு, முன்னை உத்தமர் எவருளும் - உன் முன்னோர்
முதலான சிறந்த உத்தமர் யாவருள்ளும், முறைமைக்கும் நெறிக்கும்
உன்னை ஒப்பவர் இலர் என மூவரும் உரைத்தார் - நீதிமுறைப்படி
ஆட்சி செய்வதற்கும் நன்னெறியில் நடப்பதற்கும் உன்னைப் போன்றவர்
ஒருவரும் இல்லை என்று மூவரும் கூறினார்கள்.

     மூவரும் அரிச்சந்திரனை நோக்கி மலர்க்கையாலமைத்து நிறுத்தி,
'உன்னைப் போன்ற நெறிமுறை தவறாத நிருபர் இவ்வுலகில் ஒருவரும்
இலர்' என்று புகழ்ந்துரைத்தார்.
                                                    (23)

 
  மூவரையும் அரிச்சந்திரன் முதலியவர் வணங்குதல்   
1136. தேவ தேவர்கள் அருளிய திருமொழி கேளா
யாவர் இப்பயன் பெற்றவர் என்றுநைந் துருகிப்
பூவ ருங்குழல் வல்லியும் புதல்வரும் புருடர்
மூவ ரும்விழுந் தெழுந்துபன் முறைமுறை துதித்தார்.

     (இ - ள்.) தேவ தேவர்கள் அருளிய திருமொழி கேளா -
தேவர்களுக்குத் தலைவர்களாகிய மும்மூர்த்திகளும் அருளிய
நன்மொழிகளைக் கேட்டு, யாவர் இப் பயன் பெற்றவர் என்று நைந்து
உருகி - யாவர் இவ்வாறு நற்பயன் பெற்றவர்கள் என்று இளகி மனம்
உருகி, பூவருங் குழல் வல்லியும் புதல்வரும் புருடர் மூவரும் - மலரணிந்த
கூந்தலையுடைய சந்திரமதியும் பிள்ளைகள் இருவரும் அரிச்சந்திரன்
காசியரசன் அமைச்சனாகிய சத்தியகீர்த்தி என்னும் ஆடவர் மூவரும்,
விழுந்தெழுந்து பன்முறை துதித்தார் - கீழே விழுந்து எழுந்து பலமுறை
துதித்து வணங்கினார்கள்.

     மூவருங் கூறிய புகழ்மொழியைக் கேட்டு 'எம்மைப்போலப் பேறு
பெற்றவர் யாவர்!' என்று நெஞ்சுருகிப் பின்னும் விழுந்து வணங்கி எழுந்து
பலமுறை வணக்கஞ் செய்தனர்.
                                                    (24)