பக்கம் எண் :


552

  சிவபெருமான் விசுவாமித்திரன் செய்த செயலை
      விளக்கமாகக் கூறுமாறு பணித்தல்


  எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
  
1137. அன்னவர் வணங்கி அங்கநெக் குருகி
   யவசமுற் றெழுந்திடும் அமைதி
கன்னிபங் காளன் திருக்கரம் அமைத்துக்
   கௌசிகன் றனைஎதிர் நோக்கி
மன்னவன் தனக்கு நீயிடர் விளைத்த
   வகைமையும் எய்திய வாறும்
இன்னநற் றலத்துள் யாவரும் அறிய
   இயம்பெனத் திருவுளம் ஆனார்.

     (இ - ள்.) அன்னவர் வணங்கி அங்கம் நெக்கு உருகி அவசம்
உற்று எழுந்திடும் அளவில் - மன்னன் முதலானோர் வணங்கி உடல்
நெக்குவிட்டு உருகிப் பரவசமாகி எழுந்து நின்ற அவ்வேளையில், கன்னி
பங்காளன் திருக்கரம் அமைத்து - கன்னியாகிய உமாதேவியை இடப்
பாகத்தில் உடைய சிவபெருமான் கையினால் யாவரையும் அமரும்படி
காட்டி, கௌசிகன் தனை எதிர் நோக்கி - கௌசிகமுனிவனை நேரே
பார்த்து, மன்னவன் தனக்கு நீ இடர் விளைத்த வகைமையும் எய்திய
வாறும் - அரிச்சந்திர மன்னனுக்கு நீ துன்பம் செய்த விதத்தையும்
அவற்றை அவன் துய்த்து வென்ற வகையையும், இன்ன நல் தலத்துள்
யாவரும் அறிய இயம்பு எனத் திருவுளம் ஆனார் - இந்தத் தலத்தில்
யாவரும் அறியும்படி கூறுவாயாக எனக் கூறினார்.

     சிவபெருமான் கோசிகனை நோக்கி 'நீ அரிச்சந்திரனுக்குத் துன்பம்
விளைத்ததும், அவன் அத் துன்பங்களையெல்லாம் பொறுத்துச் சத்தியம்,
நெறிமுறை தவறாது வென்று நின்றதும், அதற்குமுன் நிகழ்ந்த வரலாறும்
எல்லாரும் அறியும்படி கூறுக!' என்றான்.
                                                     (25)

 
1138. இம்மொழி இறைவன் வினாதலும் முனிவன்
   இதயத்தில் துணுக்கமுற் றெதிர்போய்
மும்முறை நிலத்தின் மிசைவிழுந் திறைஞ்சி
   முதுமறை மொழிகளாற் பழிச்சிக்
கைம்மலர் கொடுவாய் புதைத்துமெய் குனிந்து
   கண்கள்நீர் அரும்பமெய் பொடிப்ப
எம்மையா ளுடைய இறைவகேட் டருள்கென்று
   யாவையும் நிகழ்ந்தவா றிசைப்பான்.

       (இ - ள்.) இம் மொழி இறைவன் வினாதலும் - இம்மொழிகளைச்
சிவபெருமான் சொன்னவுடன், முனிவன் இதயத்தில் துணுக்கமுற்று எதிர்
போய் - விசுவாமித்திரமுனிவன் மனத்தில் நடுக்கம் கொண்டு எதிர்
சென்று, மும்முறை நிலத்தின் மிசை விழுந்து இறைஞ்சி - மூன்று முறை
நிலத்தின்மேல் விழுந்து வணங்கி, முது மறை மொழிகளால் பழிச்சி -
பழைமையான வேதமொழிகளால் துதித்து வழிபட்டு, கை மலர் கொடு
வாய்