பக்கம் எண் :


553

புதைத்து மெய் குனிந்து - மலர் போன்ற கையினால் வாயை
மூடிக்கொண்டு உடம்பை வளைத்துக் குனிந்து, கண்கள் நீர் அரும்ப
மெய் பொடிப்ப - கண்களிலிருந்து கண்ணீர் சிந்தவும் உடம்பு
புளகாங்கிதம் கொள்ளவும், எம்மை யாள் உடைய இறைவ கேட்டருள்க
என்று - எம்மை ஆட்கொள்ளுகின்ற இறைவனே! கேட்டருள்வாயாக
என்று சொல்லி, யாவையும் நிகழ்ந்தவாறு இசைப்பான் - நடந்தவை
எல்லாவற்றையும் கூறத் தொடங்கினான்.

     சிவபெருமான் வினவியவுடனே கோசிகன் மும்முறை வணங்கித்
துதித்துக் 'கேட்டருள்க!' என்று முதலிற் கூறிப் பின்னர் முறையாகக் கூறத்
தொடங்கினான்.
                                                    (26)

  விசுவாமித்திரன் நிகழ்ந்த செயலை விளக்கிக் கூறுதல்   
1139. வாசவன் முன்னாள் வினாயகா ரணமும்
   வசிட்டனும் தானுமன் றிட்ட
பூசலும் விலங்காற் புனமழித் ததுவும்
   புரவலன் வேட்டை போந்ததுவும்
நீசமங் கையரை விடுத்ததும் தனக்கு
   நிருபனன் னாடளித் தேகிக்
காசிபுக் கீமங் காத்ததும் விளைத்த
   கருமமுங் கௌசிகன் உரைத்தான்.

       (இ - ள்.) வாசவன் முன்னாள் வினாய காரணமும் - இந்திரன்
முன் காலத்தில் கேட்ட கேள்விகளும், வசிட்டனும் தானும் அன்று இட்ட
பூசலும் - வசிட்டமுனிவனும் தானும் அன்று செய்துகொண்ட சொற்போரும்,
விலங்கால் புனம் அழித்ததுவும் - பிறகு தான் காட்டு விலங்குகளை
அனுப்பிச் சோலைகளையும் வயல்களையும் அழித்த விதமும், புரவலன்
வேட்டை போந்ததுவும் - அரசன் வேட்டையாட வந்ததும், நீச
மங்கையரை விடுத்ததும் - இழிந்த குலப் பெண்களைத் தான் மன்னனிடம்
அனுப்பியதும், தனக்கு நிருபன் நன்னாடு அளித்து ஏகி - தனக்கு
மன்னன் தன்னுடைய நல்ல நாட்டைக் கொடுத்துவிட்டுச் சென்று, காசி
புக்கு ஈமம் காத்ததும் - காசிமாநகரத்துட்புகுந்து சுடுகாட்டைக்
காத்துக்கொண்டு இருந்ததும், விளைத்த கருமமும் - அப்பொழுது தான்
செய்த செயல்களும், கௌசிகன் உரைத்தான் - கௌசிகமுனிவன்
கூறினான்.

     இந்திரன் முதலில் 'அரசர்களிற் சிறந்தவர் யார்?' எனக் கேட்டதும்,
வசிட்டர் 'அரிச்சந்திரனை உயர்ந்தவன்' என்று கூறியதும், தான்
'தாழ்ந்தவன்' என்று கூறியதும், அதனை மெய்ப்பிக்கத் தான் பல
துன்பங்கள் அம் மன்னனுக்கு விளைத்ததும், அத் துன்பங்களைப்
பொறுத்துச் சத்தியமும் முறைமையும் தவறாது நடந்ததையும் விளக்கமாகக்
கூறினன் விசுவாமித்திரன்.
                                                    (27)