பக்கம் எண் :


555

     (இ - ள்.) கோது இலாக் குணத்தோன் நீதியும் நெறியும் குறியும்
யான் அறிகிலாது இகழ்ந்தேன் - குற்றமில்லாத நற்குணங்களையுடைய
அரிச்சந்திரனுடைய நீதிமுறைகளையும் நல்ல நெறிகளையும் அவனுடைய
குறிக்கோளையும் யான் அறியாமல் அவனை இகழ்ந்தேன், ஆதலால்
வென்றோன் வசிட்டனே தோற்றோன் அடியனே அடியனே -
ஆதலினால் வென்றவன் வசிட்டமுனிவனேயாவான் தோற்றவன்
அடியனேயாவேன், மேனாள் காதலால் செய்த தவத்தினில் பாதி காவலன்
தனக்கு யான் அளித்தேன் - முன்னாளில் நான் விருப்பத்தோடு செய்த
தவத்தில் பாதியை மன்னனுக்கு யான் கொடுத்துவிட்டேன், ஈது அலால்
எனக்கு அன்று ஈந்த பேர் அரசும் ஈந்தனன் என்று உரை செய்தான்
- இஃது அல்லாமல் எனக்கு அன்று மன்னன் அளித்த பேரரசையும்
கொடுத்துவிட்டேன் என்று முனிவன் கூறினான்.

     சிவபெருமான் கேட்டவுடன் கோசிகன் 'நானே தோற்றவன்!
வசிட்டனே வென்றவன்! ஆதலால் நான் கூறிய வஞ்சினத்தின்படி என்
தவத்திற் பாதியையும் அளித்தேன்! எனக்குத் தந்த பூமியையும்
மன்னனுக்குக் கொடுத்துவிட்டேன்!' என்று கூறினன்.
                                                    (29)

 
    அரிச்சந்திரன் மறுத்துக் கூறல்
1142. உரைத்தது செவியில் காய்ந்த நாராசம்
   ஓட்டிய தெனவிறை உருகிக்
கரப்பினர் தாமும் கொடுத்தது வாங்கக்
   கண்டிலோங் கேட்டிலோங் கையேற்(று)
இரப்பினர்க் களித்த பொருள்தனைக் கொண்டோன்
   இவன்எனப் பெயர்படைத் துலகம்
புரப்பவன் யானோ இப்பழி தனையான்
   பூண்கிலேன் என்றனன் பின்னும்.

       (இ - ள்.) உரைத்தது செவியில் காய்ந்த நாராசம் ஓட்டியது என
இறை உருகி - முனிவன் கூறிய மொழிகள் மன்னன் செவியில் காய்ச்சிய
நாராசத்தை ஊற்றியது போல் இருந்ததனால் அவன் மனம் உருகி,
கரப்பினர் தாமும் கொடுத்தது வாங்கக் கண்டிலோம் - இரப்பார்க்கு
இல்லை என்று கூறி ஒளித்து வைப்பவரும் ஒருவருக்குக் கொடுத்ததை
வாங்க யாம் காணவில்லை, கேட்டிலோம் - கேட்டதும் இல்லை, கை
ஏற்று இரப்பினர்க்கு அளித்த பொருள்தனைக் கொண்டோன் இவன்
எனப் பெயர் படைத்து உலகம் புரப்பவன் யானோ - கையேற்று இரந்து
கேட்டவர்க்குக் கொடுத்த பொருளைத் திரும்பப் பெற்றுக்கொண்டவன்
இவன் என்ற கெட்ட பெயரைப் பெற்று இவ்வுலகத்தை ஆளும் மன்னன்
ஆவேனோ யான், இப் பழிதனை யான் பூண்கிலேன் என்றனன் பின்னும்
- இப் பழிச்செயலை யான் மேற் கொள்ளமாட்டேன் என்றான்; மேலும்,

     கோசிகன் கூறியது கேட்ட அரிச்சந்திரன் 'கொடுத்த பொருளைத்
திரும்பவும் வாங்குவோர் ஒருவரும் இலர்; இரவலர்க் கீயாதவரும்
ஈந்ததை வாங்கார்; நான் வாங்குவனோ! வாங்கின் அது பழிச் சொல்லாம்'
என்று மறுத்தனன்.
                                                    (30)