பக்கம் எண் :


556

1143. இம்மையிற் பழியாம் மறுமையின் நரகம்
   இரந்தவர்க் களித்ததை வாங்கின்
செம்மையோர்க் கெல்லாம் பெருநமையாமித்
   தீமைசெய் வதற்குநீ உலகத்(து)
எம்மையோ கண்டாய் இதற்குமுன் தீரா
   இடர்பல விளைத்தனை எனினும்
மும்மையும் பழியே சூட்டுதல் தகுமோ
   என்றனன் முனியதற் குரைப்பான்.

     (இ - ள்.) இரந்தவர்க்கு அளித்ததை வாங்கின் - இரந்து கேட்ட
வர்க்குக் கொடுத்ததைத் திருப்பி வாங்கினால், இம்மையில் பழியாம் -
இப்பிறப்பில் பழியுண்டாகும், மறுமையில் நரகம் - மறுமையில் நரகம்
எய்துவர், செம்மையோர்க்கெல்லாம் பெரு நகையாம் - செம்மை
நெறியில் நடக்கும் பெரியோர்க்கெல்லாம் நகைப்பிற்கு இடமான
செயலாகும், இத் தீமை செய்வதற்கு நீ உலகத்து எம்மையோ கண்டாய்
- இத் தீய பழியைச் சுமத்துவதற்கு நீ இந்த உலகத்தில் எம்மையோ
இடமாகக் கண்டாய்?, இதற்கு முன் தீரா இடர் பல விளைத்தனை
எனினும் - இதற்குமுன் எமக்கு நீ பல துன்பங்களை உண்டாக்கினாய்
என்றாலும், மும்மையும் பழியே சூட்டுதல் தகுமோ என்றனன் - மூன்று
பிறவிகளிலும் எமக்குப் பழி சூட்டவே நீ நினைத்தல் தகுமோ? என்றான்,
முனி அதற்கு உரைப்பான் - முனிவன் அதற்கு விடை கூறத்
தொடங்கினான்.

     பின்னும் அரிச்சந்திரன் கோசிகனை நோக்கி 'இரந்தவர்க்குக்
கொடுத்த பொருளை ஒருவன் வாங்கினால் அது பழியாம்; நரகத்திலும்
சேர்க்கும்; அறிஞர் நகைப்பார். இத்தீமையை எங்களுக்குச் செய்கின்றாய்!
இது தக்கதுவோ உனக்கு?' என்றர்.
                                                    (31)

 
  கோசிகமுனிவன் மீண்டும் கூறுதல்
1144. கன்னலங் கழனி நாடும்நன் நகரும்
   கருதிச்செய் தவத்தையான் விட்டு
மன்னவன் ஆக வல்லனோ மீண்டும்
   வள்ளல்கேள் வசிட்டனும் யானும்
முன்னமே மொழிந்த முறையறி வதற்குன்
   முறைமைசோ தித்தறிந் துணர்ந்தேன்
நின்னகர் நீயே ஆளுதி என்ன
   நெடுந்தகை மறுத்தனன் மறித்தும்.

       (இ - ள்.) கன்னலம் கழனி நாடும் நன்னகரும் கருதி - கரும்பு
விளையும் வயல்கள் சூழ்ந்த நாட்டையும் நகரத்தையும் எண்ணி, செய்
தவத்தை யான் விட்டு மீண்டும் மன்னவன் ஆக வல்லனோ - செய்கின்ற
தவத்தை விடுத்து மறுபடியும் மன்னவன் ஆக நான் விரும்புவேனோ!,
வள்ளல் கேள் - மன்னனே! கேட்பாயாக, வசிட்டனும் யானும் முன்னமே
மொழிந்த முறை அறிவதற்கு உன் முறைமை சோதித்து அறிந்து