பக்கம் எண் :


565

     (இ - ள்.) கரி பரி ஈட்டத்தோடும் கண மணித் தேரும் தாரும் -
யானை குதிரை இவற்றின் கூட்டத்தோடு இரத்தினமணிகள் பதித்த
தேரும் சேனை வீரரும், தெரிவையர் குழாமும் செம்பொன்
சிவிகையும்கவிகை தானும் - பெண்கள் கூட்டமும் செம்பொன்னால் ஆகிய
பல்லக்குகளும் குடைகளும், விரி பெருந் தூளி ஆர்க்க வெண் கொடிப்
படலம் மூட - மிகுந்த பெரிய தூளிகள் நிறைய அவற்றை வெண்கொடி
வரிசைகள் மறைக்க, சரி பெருங் கடல்கள் போல் வந்து அரசனைச்
சார்ந்த வன்றே - உலாவுகின்ற கடல்களைப்போல வந்து அரசனைச்
சூழ்ந்து கொண்டன.

     காசிமன்னனிடத்திற்கு யானை முதலிய படைகளெல்லாம் வந்து
சேர்ந்தன. குடை கொடி முதலிய அரசர்க்குரிய சின்னங்கள் யாவும் வந்து
நிறைந்தன.
                                                    (46)

1159. வானவர் கோனும் வேத மாமுனி வோரும் வைவேல்
தானையும் காசி வேந்தும் சத்திய கீர்த்தி தானும்
ஆனையும் தேரும் மாவும் அடர்ந்தெழ அயோத்தி வேந்தன்
மாநகர் விட்டெ ழுந்தான் மழையென முரசம் ஆர்த்த.

       (இ - ள்.) வானவர் கோனும் வேதமா முனிவோரும் -
தேவர்க்கு அரசனாகிய இந்திரனும் வேதங்களைக் கற்ற முனிவர்களும்,
வை வேல் தானையும் காசி வேந்தும் சத்தியகீர்த்தி தானும் - கூர்மையான
வேலையுடைய சேனைகளும் காசிநகரத்து அரசனும் சத்தியகீர்த்தி என்னும்
அமைச்சனும், ஆனையும் தேரும் மாவும் அடர்ந்து எழ - யானையும்
தேரும் குதிரைகளும் நெருங்கிச் செல்ல, அயோத்தி வேந்தன் மா நகர்
விட்டு எழுந்தான் முரசம் மழையென ஆர்த்த - அயோத்திமன்னன்
பெரிய காசிநகரத்தை விட்டுப் புறப்பட்டான் முரசங்கள் மழைபோல்
ஒலித்தன.

     காசிமன்னன், இந்திரன், முனிவோர், பலவகைப் படைகள் சூழ்ந்துவர,
அரிச்சந்திரன் காசியை விட்டுப் புறப்பட்டான். இடி போல முரசங்களும்
முழங்கின என்பது.
                                                    (47)

 
     அரிச்சந்திரனைத் தேரில் ஏற்றுதல்   
1160. கானடை ஏகு மன்னைக் காசியர் வேந்தன் கண்டு
தேனடை யலங்கன் மார்ப தேர்மிசை ஏறு கென்னத்
தானது மறுத்த லோடும் தபோதனர் எல்லாம் வேண்ட
வானவர் எடுத்துச் செம்பொன் மணிநெடுந் தேரில் வைத்தார்.

     (இ - ள்.) கால் நடை ஏகும் மன்னைக் காசியர் வேந்தன் கண்டு
- கால் நடையாக நடந்து செல்கின்ற மன்னனைக் காசி மன்னன் பார்த்து,
தேன் அடை அலங்கல் மார்ப தேர் மிசை ஏறுக என்ன - வண்டுகள்
மொய்க்கின்ற மாலையணிந்த மன்னனே! தேரின்மேல் ஏறிக்கொள் என்று
சொல்ல, தான் அது மறுத்தலோடும் - மன்னன் தான் அதனை மறுத்த
உடனே, தபோதனர் எல்லாம் வேண்ட - முனிவர் யாவரும்
வேண்டிக்கொண்டதனால், வானவர் எடுத்துச் செம்பொன் மணி நெடுந்
தேரில் வைத்தார் - தேவர்கள் எடுத்துச் செம்பொன்னால் செய்து மணிகள்
இழைத்த பெரிய தேரில் ஏற்றினார்கள்.