அரிச்சந்திரன்
கால்நடையாகச் சென்றான்; காசிமன்னன்
'தேரிலேறிச் செல்க!' என்று வேண்டினன். அதனை மறுத்துச் செல்ல,
முனிவர்களனைவரும் பின்னும் வேண்டினர் : அதனால் அவனைத்
தேவர்கள் எடுத்துத் தேர்மேல் வைத்தனர்.
(48)
|
இந்திராணி
சந்திரமதிையத்
தேரிலேற்றுதல் |
1161. |
சந்திர
மதியைக் கற்பின் தழலினைத் தீண்ட அஞ்சி
அந்தரத் திமையோர் மாந்தர் அனைவரும் அகல நின்றார்
இந்திரன் தேவி யென்னும் இளமுலைக் குதலைச் செஞ்சொல்
சுந்தரி திருக்கை பற்றிச் சுடர்மணித் தேரில் வைத்தாள். |
(இ - ள்.) சந்திரமதியைக் கற்பின்
தழலினைத் தீண்ட அஞ்சி
- சந்திரமதி என்கின்ற கற்பிற் சிறந்த நெருப்பைத் தீண்டுவதற்கு அஞ்சி,
அந்தரத்து இமையோர் மாந்தர் அனைவரும் அகல நின்றார் -
வானுலகத்துத் தேவர்களும் மனிதர்களும் யாவரும் விலகித் தொலைவில்
நின்றனர், இந்திரன் தேவி என்னும் இள முலைக் குதலைச் செஞ்சொல்
சுந்தரி - இந்திரன் மனைவி என்கின்ற இளமுலையினையும் குதலை
மொழியினையும் உடைய அழகிய தேவியானவள், திருக் கை பற்றிச் சுடர்
மணித் தேரில் வைத்தாள் - அழகிய கைகளைப் பற்றிக்கொண்ட போய்
ஒளிவீசும் மணிகள் பதித்த தேரில் இருக்கச் செய்தாள்.
அரிச்சந்திரனை எடுத்துத் தேர்மேலேற்றியது போலச்
சந்திரமதியைத் தொட்டுத் தூக்கித் தேர்மேலேற்றுவதற்கு அஞ்சி
எல்லாரும் நின்றார்கள்; அது கண்ட இந்திராணி அவளை யழைத்துத் தன்
தேரில் ஏற்றிக்கொண்டாள்.
(49)
1162. |
கண்ணிபாற்
பட்டு ழன்று கழன்றவெங் களிறும் கன்றும்
திண்ணிய பிடியும் பண்டைப் பயிலிடம் சேர்தல் போலப்
புண்ணிய வேந்துஞ் சேயும் பூவையும் தேரில் ஏறி
மண்ணிலுள் ளோர்கள் வாழ்த்த மாநகர் விட்ட கன்றார். |
(இ
- ள்.) கண்ணிபால் பட்டு உழன்று கழன்ற - வேடர் வைத்த
வலையினுள் அகப்பட்டு வருந்திப் பின்பு நீங்கிய, வெங்களிறும் கன்றும்
திண்ணிய பிடியும் - கொடிய யானையும் கன்றும் வலிய பெண் யானையும்,
பண்டைப் பயிலிடம் சேர்தல் போல - முன்பு பழகி வாழ்ந்த இடத்தை
அடைதல் போல, புண்ணிய வேந்தும் சேயும் பூவையும் தேரில் ஏறி -
புண்ணியம் மிக்க மன்னனும் மைந்தனும் சந்திரமதியும் தேரில்
ஏறிக்கொண்டு, மண்ணிலுள்ளோர்கள் வாழ்த்த மா நகர் விட்டு அகன்றார்
- மண்ணுலகத்தில் உள்ளவர்கள் வாழ்த்த காசிமாநகரத்தை விட்டு
அகன்று சென்றனர்.
வேடர்கள்
வலையிலகப்பட்ட யானையும் பிடியும் கன்றும் அவ்
வலையைத் தொலைத்து நீங்கித் தாம் பழகிய இடத்தை யடைவது போல
மன்னனும் மனைவியும் மைந்தனும் தம்முடைய நகரத்திற்குச் செல்கின்றனர்
என்பது. இஃது உவமையணி.
(50)
|