பக்கம் எண் :


567

      வாரணவாசி ஆற்றங்கரை யடைதல்   
1163. தோரண வாயில் பின்னாத் துழனியங் கழனி நண்ணிப்
பூரண வாவி நீங்கிப் பூம்பொழில் பலவும் தீர்ந்து
காரணத் தமைச்ச ரோடும் கடல்பெருஞ் சேனை யோடும்
வாரண வாசி யாற்றின் வண்டலின் வந்தி றுத்தான்.

     (இ - ள்.) தோரண வாயில் பின்னா - தோரணங்கட்டிய காசி
நகரக் கோட்டை வாயில் பின்னால் இருக்கும்படி, துழனி அம் கழனி
நண்ணி - ஒலிகளையுடைய மருதநிலத்தை அடைந்து, பூரண வாவி நீங்கி
பூம் பொழில் பலவும் தீர்ந்து - நிறைந்த மலர்களையுடைய குளங்கள்
பலவற்றையும் நீங்கிப் பின்பு பல சோலைகளையும் கடந்து, காரணத்து
அமைச்சரோடும் கடல் பெருஞ் சேனையோடும் - செயல் புரிவதில் வல்ல
அமைச்சர்களோடும் கடல்போல் பரந்த சேனைகளோடும், வாரண வாசி
ஆற்றின் வண்டலின் வந்து இறுத்தான் - வாரணவாசி நகரத்து
ஆற்றங்கரையில் வந்து தங்கினான்.

     வாரணவாசி யாறு - கங்கை யாறு; காசிக்குரியது கங்கையாதலின்.
வயல், பொய்கை, சோலை பலவற்றையுங் கடந்து கங்கையை
யடைந்தார்கள் எல்லோரும்.
                                                    (51)

 
        யமுனை யாற்றினை யடைதல்
1164. அந்தமா நதியிற் றீர்த்தம் ஆடியன் றங்கு வைகி
மந்தரா சலப்பு யத்தான் மற்றைநாள் ஏகி வாசச்
சந்தனா டவியும் வெற்பும் தடங்களும் கடந்து மெல்ல
வந்தநாள் யமுனை யாற்றின் கரையினை வல்லை சார்ந்தான்.

       (இ - ள்.) அந்த மா நதியில் தீர்த்தம் ஆடி அன்று அங்கு
வைகி - அந்தக் கங்கை யாற்றில் நீராடி அன்று அவ்விடத்தில் தங்கி,
மந்தராசலப் புயத்தான் மற்றை நாள் ஏகி - மந்தர மலைபோன்ற
தோள்களையுடைய அரிச்சந்திரன் மறுநாள் புறப்பட்டு, வாசச் சந்தன
அடவியும் வெற்பும் தடங்களும் கடந்து - மணம் வீசும் சந்தனமரக் காடும்
மலைகளும் வேறு பல இடங்களும் கடந்து சென்று, மெல்ல வந்த நாள்
யமுனையாற்றின் கரையினை வல்லை சார்ந்தான் - மெதுவாக வந்த
நாளில் யமுனை யாற்றங்கரையை விரைந்த அடைந்தான்.

     கங்கை யாற்றில் மூழ்கிப் பின் அங்குத் தங்கி மறுநாட் புறப்பட்டு
மலை, வனம், சந்தனக்காடு இவற்றைக் கடந்து யமுனை யாற்றங்கரை
வந்து சேர்ந்தனன் என்க.
                                                    (52)

 
         யமுனை கோதாவிரி நீராடல்
1165. அந்நதி தீர்த்தம் ஆடி அணிமணி தாளஞ் செம்பொன்
மின்னவிர் தரங்கக் கோதா விரித்துறைத் தீர்த்தம் ஆடிப்
பன்னதி கடந்து வெற்றிப் பகீரதன் கொணர்ந்த கங்கை
நன்னதி தன்னை வந்து நண்ணினான் விண்ணோ ரோடும்.