மீண்டு வருவதைக் கண்டு,
கங்கை மா நதி பெருகிற்று அன்றே - கங்கை
என்னும் பேராறு வெள்ளப்பெருக்கெடுத்து விளங்கியது.
அரசனையும்
சந்திரமதியையும் தேவதாசனையும் கண்ட கங்கை
யாறு கன்றைக் கண்ட பசுவின் மடி பால் சுரந்தது போலப் பெருகியது.
இஃது உவமையணி.
(55)
1168. |
வரைபல உருட்டி
நீண்ட மரம்பல பிடுங்கி வெள்ளை
நுரைபல சிதறி எங்கும் நூறையும் வராலும் பாய
நிரைநிரை பதும ராக நித்திலங் கொழித்தி ரண்டு
கரையையுங் கடந்து காந்தக் கடலென வந்த தன்றே. |
(இ - ள்.) வரை பல உருட்டி நீண்ட
மரம் பல பிடுங்கி -
கற்கள் பலவற்றை உருட்டிக்கொண்டும் நீண்ட மரங்கள் பலவற்றைப்
பிடுங்கிக்கொண்டும், வெள்ளை நுரை பல சிதறி எங்கும் நூறையும்
வராலும் பாய - வெண்மையான நுரை பலவற்றைச் சிதறிக்கொண்டும்
எவ்விடத்தும் மலங்கு மீனும் வரால் மீனும் பாயும்படி, நிரை நிரை
பதுமராகம் நித்திலங் கொழித்து - வரிசை வரிசையாகப் பதுமராகம்
முத்து என்னும் மணிகளைக் கொழித்துக் கரையிலே சிந்தி, இரண்டு
கரையையும் கடந்து உகாந்தக் கடல் என வந்தது - இரண்டு
கரைகளையும் உடைத்துக்கொண்டு ஊழிக் காலத்துக் கடல் பெருகுவது
போல வந்தது.
'வரை' என்பது ஆகுபெயராய் அதன் உறுப்பாகிய கல்லினை
யுணர்த்தியது. வரை மூங்கில் எனவும் கூறலாம். நூறை - மலங்கு என்ற
மீன்.
(56)
|
கங்கைக்
கரையின்கண் தங்குதல் |
1169. |
விரிகடல்
என்ன வந்த விமலையின் கரையில் ஏறிச்
சொரிமலர்ச் சூழல் தோறும் சுடர்மணிப் பாறை தோறும்
வரிமணல் வண்டல் தோறும் மால்வரைச் சாரல் தோறும்
தெரிவையர் குழாமும் தேவர் சேனையும் அடைந்த அன்றே. |
(இ
- ள்.) விரி கடல் என்ன வந்த விமலையின் கரையில் ஏறி -
பரந்த கடல்போல் வந்த கங்கையின் கரையில் ஏறி, சொரி மலர்ச் சூழல்
தோறும் சுடர் மணிப் பாறை தோறும் - சொரிகின்ற மலர்களையுடைய
சோலைகளிலும் ஒளிவீசும் மாணிக்கப் பாறைகளிலும், வரி மணல்
வண்டல் தோறும் - அடுக்கு மலைபோன்ற மணற்குவியல்களிலும், மால்
வரைச் சாரல் தோறும் - பெரிய மலைப்பக்கங்களிலும், தெரிவையர்
குழாமும் தேவர் சேனையும் அடைந்த அன்றே - பெண்கள் கூட்டமும்
தேவர் கூட்டமும் அடைந்து தங்கியிருந்தனர்.
விமலை
- குற்றமில்லாதவள்; தூய்மையுடையவள் எனப் பொருள்
தந்து கங்கையை யுணர்த்தியது. 'விமலன்' எனக் கடவுளுக்குப் பெயர்
கூறுவதும் இக்காரணம் கருதிய தென்க. வரி மணல் : வினைத் தொகை;
வரிவரியாகக் கோலமிட்டதுபோன்ற மணல் என்று கொள்க.
(57)
|