பக்கம் எண் :


570

1170. சுரர்சில சூழல் சார்ந்தார் தோகைய ரோடு மண்வாழ்
நரர்சில சூழல் சார்ந்தார் நான்மறைத் தவத்திற் பெற்ற
வரர்சில சூழல் சார்ந்தார் மகரயாழ் வல்ல விச்சா
தரர்சில சூழல் சார்ந்தார் தபனனும் குடபாற் சார்ந்தான்.

     (இ - ள்.) சுரர் சில சூழல் சார்ந்தார் - தேவர்கள் சில இடங்களிற்
சென்று தங்கினர், மண் வாழ் நரர் தோகையரோடு சில சூழல் சார்ந்தார்
- மண்ணின்மேல் வாழ்கின்ற மனிதர் பெண்களோடு சில இடங்களிலே
சென்று தங்கினர். நான்மறை தவத்திற் பெற்ற வரர் சில சூழல் சார்ந்தார்
- நான்கு வேதங்களையும் ஓதுகின்ற தவத்தினாற் சிறந்த மறையோர் சில
இடங்களில் தங்கினர், மகர யாழ் வல்ல விச்சாதரர் சில சூழல் சார்ந்தார்
- மகரவீணை பாடுவதில் வல்லமை பெற்ற வித்தியாதரர் சில இடங்களிலே
தங்கினர், தபனனும் குடபால் சார்ந்தான் - கதிரவனும் மேலைத்
திசையிலே சென்று சார்ந்தான்.

     ஒவ்வொருவரும் தத்தம் இனத்தோடு சேர்ந்து தங்குவது
இயற்கையாதலின், தேவர்கள் ஓரிடத்திற் கூடியும், மனிதர்கள் ஓரிடத்திற்
கூடியும், தவத்தோர் ஓரிடத்திற் கூடியும், வீணை வாசிக்கும் விஞ்சையர்
ஓரிடத்திற் கூடியும் தங்கினர் என்று ஆசிரியர் கூறினர்.
                                                    (58)

 
1171. கரடவெங் களிறும் மாவும் காரகில் ஆரஞ் சாதி
சுரதரு மரத்தி னோடும் சேர்த்தனர் துங்கத் தெய்வப்
புரவிகள் பூண்ட நேமிப் புட்பகத் தேருஞ் செம்பொன்
வரைபல நிரைத்த வென்ன வடகரை செறிந்த அன்றே.

       (இ - ள்.) கரட வெம் களிறும் மாவும் - மதம் ஒழுகுகின்ற
கொடிய யானைகளையும் குதிரைகளையும், கார் அகில் ஆரம் சாதி
சுரதரு மரத்தினோடும் சேர்த்தனர் - கருமையான அகில் சந்தனம் சாதி
தேவதாரு என்னும் மரங்களிலே சேர்த்துக் கட்டினர், துங்க தெய்வ
புரவிகள் பூண்ட நேமி புட்பகத் தேரும் செம்பொன் வரை பல நிரைத்த
என்ன வடகரை செறிந்த அன்றே - உயர்வான தெய்வத் தன்மையுடைய
குதிரைகள் பூட்டப்பட்ட சக்கரத்தோடு கூடிய புட்பகத் தேர்கள் பொன்
மலைகள் பலவற்றை வரிசையாக அமைத்ததுபோல வடகரையிலே
அமைந்தன.

     யானைகளையும் குதிரைகளையும் அகில், சந்தனம், சண்பகம்,
தேவதாரு ஆகிய மரங்களிற் கட்டினர். குதிரைகள் பூட்டிய
தேர்களெல்லாம் வடகரையில் நின்றன.
                                                    (59)

 
1172. ஆதபம் அகற்றி வெய்யோன் ஆழ்கடல் புகுந்த பின்னர்
பாதக முனியும் பாரில் பாவமும் அகன்ற காளை
பூதல வேந்தன் வந்து புண்ணியம் பரந்த தேபோல்
சோதிமா மதியம் தோன்றித் தூநிலா விரித்த தன்றே.

     (இ - ள்.) ஆதபம் அகற்றி வெய்யோன் ஆழ் கடல் புகுந்த
பின்னர் - வெய்யிலை நீக்கிக்கொண்டு கதிரவன் ஆழமான கடலிலே
புகுந்த பிறகு,