பக்கம் எண் :


574

பாய்கின்றதுபோல, உள்ளமும் மகிழ - மனம் மகிழவும், உரோமம்
சிலிர்ப்புற - மெய்ம்மயிர் சிலிர்க்கவும், ஊரில் சேனை வெள்ளமும் அரசர்
தாமும் வியந்து எதிர் கொண்டார் - அயோத்திமாநகரத்தில் உள்ள
சேனைகளும் மற்றை அரசர்களும் பாராட்டி எதிர்கொண்டு வரவேற்கத்
தொடங்கினர். அன்று + ஏ : அசைகள்.

     அரிச்சந்திரன் வருவது கேள்வியுற்ற நகரமாந்தரும் சிற்றரசர்களும்
படைகளும் எதிர்கொண்டழைக்க மனமகிழ்ந்து வந்தனர்; வெள்ளம்
பள்ளத்திற் பாய்வதுபோல உள்ளத்தில் மகிழ்ச்சி பெருக எனப் பொருள்
கொள்க.
                                                    (67)

 
          குடிமக்கள் மகிழ்ச்சிகூரல்
1180. அயில்நெடும் படைது றந்த கரத்தினர் அயோத்தி மூதூர்
எயில்கடந் தேகி மன்னைக் கண்டனர் இறைஞ்சி வீழ்ந்தார்
மயிர்பொடிப் புறம னங்கண் மகிழ்ந்திட மறலி கொண்ட
உயிர்வரப் படர்ந்து றந்த உடலமே ஒத்தார் அன்றே.

       (இ - ள்.) அயில் நெடும் படை துறந்த கரத்தினர் - ஊர்
மக்கள் நீண்டவேல் முதலான ஆயுதங்கள் இல்லாத
கைகளையுடையவராய், அயோத்தி மூதூர் எயில் கடந்து ஏகி மன்னைக்
கண்டனர் - அயோத்தி மாநகரத்தின் பழைமையான மதிலைக் கடந்து
சென்று மன்னனைக் கண்டனர், இறைஞ்சி வீழ்ந்தார் - வணங்கித்
தரையில் வீழ்ந்தனர், மயிர் பொடிப்புற மனம் கண் மகிழ்ந்திட -
மெய்ம்மயிர் சிலிர்க்கவும் மனமும் கண்ணும் மகிழவும், மறலி கொண்ட
உயிர் வர - இயமன் கொண்டுபோன உயிர் வந்தவுடன், படர் துறந்த
உடலமே ஒத்தார் அன்றே - துன்பம் நீங்கப்பெற்ற உடல் போன்று
இன்புற்று இருந்தனர்.

     நகரமக்கள் அரசனைக் கண்டதற்குக் கூற்றுவன் கொண்டுபோன
உயிரை உடல் கண்டதனை உவமையாக்கிக் கூறினர். இஃது இல்பொரு
ளுவமையணி.
                                                    (68)

 
       அரிச்சந்திரன் தன் மண்டபம் சேர்தல்
1181. ஆரணம் முழங்க யோத்தி அணிபெருஞ் சேனை யோடும்
வாரண வாசி வேந்தன் படையொடும் வள்ளல் ஏகித்
தோரண வாயில் நண்ணிச் சுடர்மணித் தேரி ழிந்து
பூரண கும்பம் மன்னும் மண்டபம் பொலியப் புக்கான்.

     (இ - ள்.) ஆரணம் முழங்கு அயோத்தி அணி பெருஞ் சேனை
யோடும் - மறைகள் முழங்குகின்ற அயோத்திமாநகரத்தின் அழகிய பெரிய
சேனையோடும், வாரண வாசி வேந்தன் படையொடும் - காசி மாநகரத்து
அரசனுடைய படையுடனும், வள்ளல் ஏகி தோரண வாயில் நண்ணி -
அரிச்சந்திரமன்னன் சென்று தோரணங்கள் கட்டிய கோட்டை வாயிலை
அடைந்து, சுடர் மணித் தேர் இழிந்து - ஒளி வீசும் அழகிய மணிகள்
பதித்த தேரினின்றும் இறங்கி, பூரண கும்பம் மன்னும் மண்டபம் பொலியப்
புக்கான் - நிறைகுடங்கள் வைத்து அழகு செய்யப்பெற்ற மண்டபத்துள்ளே
அழகுபெறப் புகுந்தான்.