பக்கம் எண் :


575

     காசிமன்னன் படையும் தன் பெருஞ்சேனையும் சூழ அரிச்சந்திரன்
தேரினை விட்டுக் கீழிறங்கி நடந்து மண்டபத்துள் புகுந்தான்.
                                                    (69)

 
       அரிச்சந்திரனுக்கு முடிசூட்டி வாழ்த்தல்   
1182. பன்முடி வேந்தர் தாழ்ந்து பணியப்பொற் றவிசின் ஏற்றிச்
சொன்முடி வற்ற நீர்மைத் தாபதர் சூழ்ந்து வாழ்த்த
நென்முடி சாயப் பாயும் நீர்வயல் நாடன் தன்னைப்
பொன்முடி சூட்டி வாழ்த்திப் புரந்தான் விசும்பிற் போனான்.

       (இ - ள்.) பல் முடி வேந்தர் தாழ்ந்து பணிய - முடிமன்னர்
பலர் தாழ்ந்து வணங்க, பொன் தவிசின் ஏற்றி - பொன்னாற்
செய்யப்பட்ட அரியணையில் ஏற்றி அமரச்செய்து, சொல் முடிவு அற்ற
நீர்மைத் தாபதர் சூழ்ந்து வாழ்த்த - புகழின் எல்லைகடந்த தன்மையை
யுடைய முனிவர் சூழ நின்று வாழ்த்தவும், நெல் முடி சாயப் பாயும் நீர்
வயல் நாடன் தன்னை - நெல் முடிகள் சாயும்படி நீர் பாய்கின்ற வள
வயல் நாடனாகிய அரிச்சந்திரனை, புரந்தரன் பொன் முடி சூட்டி வாழ்த்தி
விசும்பிற் போனான் - இந்திரன் பொன் முடியைச் சூட்டி வாழ்த்திப்
பின்பு விண்ணுலகத்திற்குச் சென்றான்.

     அரிச்சந்திரனை அரியணையிலேற்றிப் பல முடிவேந்தரும் பணிந்து
வாழ்த்துமாறு அவனுக்கு முடிசூட்டித் தானும் வாழ்த்திப் பின்னர் இந்திரன்
தன் உலகம் சென்றான்.
                                                    (70)

 
1183. காருள சோலை சூழுங் கௌசிகன் தீமை நன்கே
நீருள அளவும் ஈரேழ் நிலமுள அளவும் உன்றன்
பேருள தொருகா லத்தும் பிழைப்பில துனக்கு நேர்வே(று)
ஆருளர் என்னா வாழ்த்தி அருந்தவ முனிவர் போனார்.

     (இ - ள்.) கார் உள சோலை சூழும் கௌசிகன் தீமை நன்கே -
மேகங்கள் உலாவுகின்ற சோலை சூழ்ந்த கௌசிகநாட்டு அரசகனாகிய
விசுவாமித்திரமுனிவன் உனக்குச் செய்த தீமைகள் எல்லாம் நல்லன
ஆயின, நீர் உள அளவும் ஈரேழ் நிலம் உள அளவும் உன்றன் பேர்
உளது - ஏழ் கடல்களும் பதினான்கு உலகங்களும் உள்ளவரையிலும்
உன்னுடைய பெயர் நிலைத்து நிற்கும், ஒரு காலத்தும் பிழைப்பு இலது -
ஒருகாலத்திலும் தவறாது, உனக்கு நேர் வேறு ஆர் உளர் என்னா -
உனக்கு ஒப்பாக வேறு யார் இருக்கின்றார்கள் என்று, வாழ்த்தி அருந்தவ
முனிவர் போனார் - வாழ்த்திவிட்டு அரிய தவமுனிவர்கள் சென்றனர்.

     இந்திரன் சென்றபின் தவமுனிவர் பலரும் கூடி 'கோசிகன் செய்த
தீமையெல்லாம் நன்மையாயின; கடலும் கடல் சூழ்ந்த பூமியும் உள்ள
வரை உன் பெயர் நிலைநிற்கும்; உன்னை யொப்பவர் ஒருவரும் இலர்;
நீ வாழ்க!' என்று வாழ்த்திச் சென்றனர்.
                                                    (71)