பக்கம் எண் :


58

1. விவாக காண்டம்
 

                      முனிவர் வரவு

                 கலிநிலைத்துறை
105. இருந்த காலையில் யாவர்க்கும் விடைகொடுத் தருளித்
திருந்து மாமுடி மன்னவன் சிலருடன் இருப்பப்
பொருந்து நன்னெறிப் புண்ணிய தீர்த்தங்கள் ஆடி
அருந்த வத்தினர் அனேகர்வந் தந்நக ரடைந்தார்.

     (இ - ள்.) திருந்து மாமுடி மன்னவன் - செங்கோன்மை திருந்திய
சிறந்த முடிமன்னனாகிய அரிச்சந்திரன், இருந்த காலையில் யாவர்க்கும்
விடை கொடுத்து அருளி - கொலுவீற்றிருந்தபொழுது திறை கட்ட வந்த
சிற்றரசர் யாவர்க்கும் விடைகொடுத்து விடுத்த பிறகு, சிலருடன் இருப்ப -
அருகு அமரும் உரிமையாளர் சிலருடன் அமர்ந்து இருக்கும் அமயம்,
அருந்தவத்தினா அநேகர் - அருந்தவ முனிவர் பலர், பொருந்து நன்னெறி
புண்ணிய தீர்த்தங்கள் ஆடி - பொருத்தமான வீட்டுநெறிப்பயன்
தரக்கூடிய புண்ணிய நீர்நிலைகளில் நீராடி, அந்நகர் வந்து அடைந்தார்
- அந்த அயோத்திமாநகர் வந்து சேர்ந்தனர்.

     மாமுடி : உரிச்சொற்றொடர்; அருமை + தவம் - அருந்தவம் :
ஈறுபோதல். இனம் மிகல்.

                                                     (1)

 
                தவக்கோலம்
106. சடையும் முண்டமும் சிகையும்நுண் தாதுகற் றோய்ந்த
உடையும் மாமர உரிகளும் உடுத்தழ கிருந்த
இடையும் தாழ்சிறு பண்டியும் மொய்த்திளைத் தோய்ந்த
நடையும் வாழ்த்தலும் சபித்தலும் முந்துறு நாவும்;

     (இ - ள்.) சடையும் முண்டமும் சிகையும் - சடையுடைய முனிவர்
சிலரும், சிகையன்றி முண்டிதக்கோல முனிவர் சிலரும், சிகையுடைய
முனிவர் சிலரும், நுண் தாது கல் தோய்ந்த உடையும் மாமர உரிகளும்
உடுத்து அழகிருந்த இடையும் - மென்மையான காவி யாடையும் சிறந்த
மர உரியும் உடுத்து அழகாக இருந்த இடைகளும், தாழ் சிறு பண்டியும்
- தாழ்ந்த சிறிய வயிறுகளும், எய்த்து இளைத்து ஓய்ந்த நடையும் -
களைத்துச் சலித்து ஓய்ந்துபோன நடையும், வாழ்த்தலும் சபித்தலும்
முந்துறு நாவும் - ஆக்கவும் அழிக்கவும் வல்ல மொழிகளையுடைய
நாக்களும்;