பக்கம் எண் :


580

திங்கணுதற் றேமொழியீர் என்றன் ஆசை
   தீரவெனைத் தழுவிநலஞ் செய்மின் என்ன
எங்கள்பிதா அறியஎமை வதுவை சூட்டில்
   இணங்குவோம் அல்லதிதற் கிசையேம் என்றார்.

     (இ - ள்.) அங்கு அவரிற் கௌசாம்பிக் குசநாபற்கு - அங்கு
உள்ள மக்கள் நால்வரில் கௌசாம்பி என்னும் நாட்டை ஆண்ட
குசநாபன் என்பவனுக்கு, ஐம்பதிற்று இரட்டி எனும் அடைவில் தோன்றும்
- நூறு என்னும் எண்ணிக்கையில் முறையே தோன்றிய, மங்கையர்தாம்
ஒரு காவில் புகுந்து நாளும் வண்டல் இழைத்திடுவர் - பெண்கள்தாம்
ஒரு சோலையில் புகுந்து வண்டல் விளையாட்டில் ஈடுபட்டிருப்பார்கள்,
அங்கே வாயு எய்தி - அவ்விடத்தில் வாயுதேவன் சென்று, திங்கள் நுதல்
தேம் மொழியீர் - பிறைத்திங்கள் போன்ற நெற்றியையுடைய இன்மொழி
புகலும் பெண்களே!, என்றன் ஆசை தீர எனைத் தழுவி நலம் செய்மின்
என்ன - என்னுடைய ஆசை தீரும் படி என்னைத் தழுவி எனக்கு
இன்பம் செய்வீர்களாக என்று கூற, எங்கள் பிதா அறிய எமை வதுவை
சூட்டில் இணங்குவோம் அல்லது இதற்கு இசையேம் என்றார் - எங்கள்
தந்தையாருக்கு அறிவித்து எம்மை நீர் மணம் செய்துகொண்டால் நாங்கள்
இணங்குவோம் இல்லையாயின் இதற்கு இசையமாட்டோம் என்றனர்.

     மேற்கூறிய நால்வரில் ஒருவனாகிய குசநாபனுக்கு நூறு பெண்
மக்கள் பிறந்து வளர்ந்து பருவமடைந்தனர். ஒருநாள் பூஞ்சோலையில்
வாயுபகவான் வந்து அப் பெண்கள்மேற் காதல் கொண்டு தன்னைப்
புணருமாறு அவர்களை வேண்டினன். அவர்கள் 'தந்தையிடம் கூறி
முறைப்படி மணந்துகொள், களவுப் புணர்ச்சிக்கு உடன்படோம்' என்றனர்.
                                                     (2)

 
1192. மறுத்துமறுத் துரைத்திடவும் பொருந்தி லாத
   வல்லியரை முதுகொடிய வாயு மோதி
முறித்துநிலத் திடைவீழ்த்திப் போன பின்னர்
   மொய்குழலார் தளர்ந்துமனை முன்றில் உற்றார்
செறுத்தவரைக் கண்டிதுவே தென்ன லோடும்
   திருவனையார் அழுதழுது செப்பத் தாதை
பிறித்துரையா துள்ளொடுக்கிச் சூளி மைந்தன்
   பிரமதத்தன் தனக்களித்தான் பேதை மாரை.

       (இ - ள்.) மறுத்து மறுத்து உரைத்திடவும் பொருந்திலாத
வல்லியரை முதுகு ஒடிய வாயு மோதி - பெண்கள் மறுத்து மறுத்துக்
கூறியும் மனம் ஒவ்வாத அப் பெண்களை வாயுதேவன் மோதி முதுகு
ஓடியச்செய்து, முறித்து நிலத்திடை வீழ்த்திப் போன பின்னர் -
அவர்களை முறித்து நிலத்தின்மேல் விழும்படி செய்து அவ் வாயுபகவான்
போன பின்னர், மொய் குழலார் - நெருங்கிய கூந்தலையுடைய
அப்பெண்கள், தளர்ந்து மனை முன்றில் உற்றார் - தளர்ச்சியடைந்து
அரண்மனை வாயிலை அடைந்தனர், செறுத்து அவரைக் கண்டு இது ஏது
என்னலோடும் - சினங்கொண்டு மன்னன் அவரைப் பார்த்து இங்ஙனம்
நீங்கள் துன்புறக் காரணம் யாது?