பக்கம் எண் :


582

     (இ - ள்.) இருசிகன் அக் கௌசிகையைப் புணர்ந்து சின்னாள்
இன்பம் நுகர்ந்து - இருசிக முனிவன் அக் கௌசிகை என்னும்
பெண்ணை மணந்து சிலநாள் இன்பம் அனுபவித்து, இருவர் தமை ஈன்ற
பின்பு - இரண்டு பிள்ளைகளைப் பெற்ற பிறகு, பிரமன் உலகு அணைந்து
தவம் புரிந்து மீள - பிரமதேவனுடைய உலகத்தையடைந்து தவம் செய்து
மீண்டு வர விரும்பியவுடன், பிரிவு நினைந்து அவள் புலம்ப முனிவன்
சீறி - தன் கணவன் பிரிந்து செல்லுதலை நினைத்து அவள் புலம்பி
வருந்தியபோது முனிவன் கோபித்து, வரு புனல் ஆறு ஆக எனச்
சபித்தலோடும் - ஓடி வருகின்ற புனல் நிறைந்த ஆறாக மாறிவிடு எனச்
சபித்தவுடன் - மானத வாவியில் வீழ்ந்து சரயுவோடு அருகு அணைந்து
பிரிந்து இழி கோமதியே ஆனாள் - மானத வாவி என்னும் வாவியில்
வீழ்ந்து சரயு என்னும் ஆற்றோடு சேர்ந்து பிரியும் கோமதி என்னும்
ஆறாக மாறினாள், அவள் நிலை ஈது இவன் உலகம் புரக்கும் நாளில் -
அந்தக் கௌசிகையின் நிலை இவ்வாறாக இந்தக் கௌசிகன் உலகத்தை
ஆண்டு வரும் காலத்தில்;

     இருசிகன் என்ற முனிவன் கௌசிகையை மணந்து மக்கள் இருவரை
ஈன்று, பின்னர்த் தவம்புரியப் பிரிந்தான். பிரிவு நினைந்து கௌசிகை
வருந்தினன். அதனை யறிந்து இருசிகன் 'நீராகக்கடவாய்' எனச் சபித்தான்.
அவ்வாறே அவள் கோமதி யாறாயினள். அது நிற்க, கவுசிகன் வரலாறு
கூறுகின்றேன்.
                                                     (5)

 
1195. மைந்தரொரு நூற்றுவரைப் பெற்று வெற்றி
   வடிவாளும் வரிசிலையுங் களிறும் மாவும்
இந்தவுல கத்திவர்போல் வல்லார் இல்லை
   என்னவளர்த் தன்னவரோ டிருக்குங் காலைத்
தந்திரமார் பெரும்படையும் தேரும் மாவும்
   தந்திரகளும் ஞாளிகளும் முந்தி யீண்ட
மந்திரிகள் தங்களொடு மக்க ளோடு
   மான்வேட்டை யாடஇவன் வனத்திற் புக்கான்.

       (இ - ள்.) மைந்தர் ஒரு நூற்றுவரைப் பெற்று - நூறு
மைந்தர்களைப் பெற்று, வெற்றி வடி வாளும் வரிசிலையும் களிறும் மாவும்
- வெற்றியையுடைய கூர்மையான வாளும் வரிந்து கட்டப்பட்ட வில்லும்
யானையும் குதிரையும் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில், இந்த உலகத்து
இவர் போல் வல்லார் இல்லை என்ன வளர்த்து - இந்த உலகத்தில்
இவரைப்போல ஒருவரும் வலியவர் இல்லை என்று கூறுமாறு வளர்த்து,
அன்னவரோடு இருக்கும் காலை - அவர்களோடு மகிழ்ந்து வாழ்ந்த
காலத்தில், தந்திரம் ஆர் பெரும் படையும் தேரும் மாவும் - நூல்களிற்
புகழ்ந்து கூறப்பட்ட சிறப்புடைய பெரிய படைகளும் தேரும் யானையும்,
தந்திகளும் ஞாளிகளும் - யானைகளும் வேட்டை நாய்களும், முந்தி
ஈண்ட - தன் முன்னால் நெருங்கிச்செல்ல, மந்திரிகள் தங்களொடும்
மக்களோடும் - மந்திரிகளோடும் தன் நூறு மக்களோடும், மான் வேட்டை
ஆட இவன் வனத்தில் புக்கான் - மான் வேட்டை ஆடுவதற்காக இவன்
வனத்திற் சென்று சேர்ந்தான்.