|
இன்னா
துரைசெய் தனைநீ புலையா
கெனவே புலையாய் எழில்கெட் டவமே
தன்னா டணுகித் தமர்சீ சீயெனத்
தள்ளத் தளமெள் ளநடந் தனனே. |
(இ
- ள்.) அந்நாளில் எனைத் திரிசங்கு அருகு உற்று - அந்த
நாளில் திரிசங்கு என்னும் மன்னன் என்னை அணுகி, அங்கத்தொடு வி்ண்
புகல் வேண்டும் எனா சொன்னான் - இவ்வுடம்போடு விண்ணுலகத்தை
அடையவேண்டும் என்று கூறினான், முடியாது என யான் மொழிய -
அவ்வாறு செய்தல் முடியாது என்று யான் கூறியவுடன், துறவோர் பிறரால்
உறுவேன் எனலும் - வேறு முனிவரால் அடைவேன் என அவன்
கூறியவுடன், இன்னாது உரை செய்தனை நீ புலை ஆகு எனவே -
எனக்கு மனவருத்தம் தரும் சொல்லை நீ மொழிந்தாய் ஆதலால் நீ
புலையன் ஆவாய் என்று யான் கூறியவுடன், புலையாய் எழில் கெட்டு
அவமே தன் நாடு அணுகி - புலையனாய் அழகு கெட்டு வீணாகத் தன்
நாட்டை அடைந்து, தமர் சீசீ எனத் தள்ளத் தள மெள்ள நடந்தனன் -
சுற்றத்தார் சீசீ என்று சொல்லித் தள்ளத்தள்ள மெதுவாக நடந்தான்.
திரிசங்கு
என்ற மன்னன் ஒருவன் 'இவ்வுடலோடு நான் துறக்கம்
புகவேண்டும்; அதற்குரியன செய்க' என்று என்பால் வந்து கூறினன். 'நான்
உடலோடு துறக்கம் புக வியலாது' என்று மறுத்தேன்; அவன் 'வேறு
முனிவரால் யான் அடைவேன்' என்றான். நான் சினந்து 'புலையனாகுக
நீ' எனச் சபித்தேன்; அவன் புலையனாகித் திரிந்தான்.
(18)
1208. |
அன்றே யெனைவிட்
டிவனைத் தரிசித்
தங்கத் தொடுவிண் புகல்வேண் டுமெனக்
கென்றே தனுளத் ததுசொல் லவவன்
என்னோ டுதொடுத் தமறத் தொழிலால்
குன்றே யும்விமா னமழைத் ததன்மேல்
கோவே றெனவே றிநடத் திடவே
சென்றே யமரா வதிசே ருதலும்
தேவா திபர்கண் டுசினந் தனரே. |
(இ - ள்.) அன்றே எனை விட்டு
இவனைத் தரிசித்து - அன்று
என்னை விட்டு நீங்கி இந்தக் கௌசிகனைக் கண்டு வணங்கி, அங்கத்
தொடு விண் புகல் வேண்டும் எனக்கு - இந்த உடம்போடு
விண்ணுலகத்தை நான் அடையவேண்டும், என்றே தன் உளத்தது சொல்ல
- என்று தன் மனத்துள் தோன்றிய கருத்தைச் சொல்ல, அவன் என்னோடு
தொடுத்த மறத் தொழிலால் - அவன் என்னுடன் கொண்ட பகைமையான
வீரச் செயலால், குன்று ஏயும் விமானம் அழைத்து - மலைபோன்ற ஒரு
விமானத்தை அழைத்து, அதன்மேல் கோ ஏறு என ஏறி நடத்திடவே -
அதன்மேல் அரசனே! ஏறிச்செல் என்றவுடன் அவன் ஏறி நடத்தினான்,
சென்றே அமராவதி சேருதலும் - அவ் விமானம் சென்று அமராவதி
நகரத்தை அடைந்தவுடன், தேவாதிபர் கண்டு சினந்தனர் - தேவர்
தலைவராகிய இந்திரன் முதலானவர் கண்டு சினங்கொண்டனர்.
|