பக்கம் எண் :


591

     விண்ணுலகம் செல்வோர் இம் மானிட உடலை விட்டு நீங்கியே
செல்வர்; தேவர் அருள் பெற்றவர் மட்டுமே இவ்வுடலுடன் விண்ணுலகு
செல்ல முடியும். சுந்தரமூர்த்தி நாயனாரும், சேரமான்பெருமாள்
நாயனாரும், ஒளவையாரும் அங்ஙனம் சென்றதாகக் கூறுவர். தம்
கட்டளை இன்றித் திரிசங்கு அங்கு வந்ததால் தேவர் சினங் கொண்டனர்.
என்னுடன் கொண்ட பகையால் கௌசிகன் அத் திரிசங்கு மன்னனைத்
துறக்கத்திற்கு விமானமேற்றி அனுப்பினன்; தேவர்கள் சினந்தனர்.
                                                    (19)

 
1209. புலையா சுரர்நா டுபுகேல் எனவே
   புறமுந் தினர்வா னவர்புட் பகமோ(டு)
அலையா விழுவான் முனிகௌ சிகனுக்
   கபயம் எனவீழ் வதறிந் தெதிர்போய்
நிலையா னவிமா னம்விழா துநிறீஇ
   நெடுவெஞ் சினமாய் விழிநின் றகனல்
பலபா லுமெரிந் தனபல் லுயிரும்
   படர்தீ யினில்வெந் துபதைத் தனவால்.

       (இ - ள்.) புலையா சுரர் நாடு புகேல் எனவே - புலையனே!
நீ தேவர் நாட்டிற் புகாதே என்று, வானவர் புறம் உந்தினர் - தேவர்கள்
வெளியில் தள்ளினர், புட்பகமோடு அலையா விழுவான் - புட்பக
விமானத்துடன் அலைந்து வருந்தி விழுகின்றவன், முனி கௌசிகனுக்கு
அபயம் என வீழ்வது அறிந்து - கௌசிகமுனிவனுக்கு நான் அடைக்கலம்
என்று சொல்லிக்கொண்டு கீழே விழுவதை அறிந்து, எதிர் போய்
நிலையான விமானம் விழாது நிறீஇ - எதிரிலே சென்று நிலையாக நின்ற
விமானம் கீழே விழாதபடி வானத்திலே நிறுத்தி, நெடு வெஞ்சினமாய்
விழி நின்ற கனல் - மிகுந்த கோபங்கொண்டு கண்ணில் வந்த
நெருப்பினால், பலபாலும் எரிந்தன - பல பகுதிகளும் எரிந்தன, பல்
உயிரும் படர் தீயினில் வெந்து பதைத்தனவால் - பல உயிர்களும் பெரிய
நெருப்பிலே விழுந்து வெந்து துன்பம் உற்றன.

     தேவர்கள் யாவரும் திரிசங்கினை விமானத்துடன் கீழே தள்ள வந்து
விழுபவன், கௌசிகனுக் கபயம் எனக் கூற, உடனே அவ் விமானத்தை
விண்ணிலே நிறுத்தி மிக்க சினங்கொண்டான்; அச் சினத் தீயால்
உயிர்ப்பொருள்கள் பலவும் வருந்தின.
                                                    (20)

 
1210. இவ்வண் டமனைத் துமெரித் துலகம்
   ஈரே ழுடனிந் திரனும் அயனும்
தெய்வங் களும்வே றுபடைப் பனெனாத்
   தேவா திபன்மால் சிவனோ டயன்வந்