பக்கம் எண் :


593

     'இவன் வரலாறு இது. இம் முனிவன் என்னை வெல்ல எத்தனையோ
தீமைகள் செய்தனன். அவையெல்லாம் பயன் பெறாது கழிந்தன. ஆதலால்,
இம் மன்னனைப் பொய்யனாக்கி என்னை இழிவாக்கக் கருதி இத்
தீமைகளிழைத்தான். இதுவும் பலியாதுபோயிற்று' என்று வசிட்டன் கூறி
முடித்தான்.
                                                    (22)

 
1212. இந்நீர் மைவசிட் டன்உரைத் திடலும்
   எழில்வா ரணவா சியர்கோன் முனிவோர்
தந்நீர் மையைநீ யலதார் அறிவார்
   தழைஞா னம்இ லார்க் கறியத்தகுமோ
நின்னீர் மையுணர்ந் தவரே யறிவார்
   நீயே யவர்நீர் மைநினைந் துணர்வாய்
எந்நீர் மையுனக் கரிதென் னவெழுந்
   திருபா தம்இறைஞ் சியிருந் தனனே.

       (இ - ள்.) இந் நீர்மை வசிட்டன் உரைத்திடலும் - இத்தன்மை
களையெல்லாம் முனிவன் உரைத்தவுடன், எழில் வாரண வாசியர் கோன்
- அழகிய காசிநகரத்து மக்களின் மன்னன், முனிவோர் தம் நீர்மையை
நீ அலது ஆர் அறிவார் - முனிவர்களின் தன்மையை நீ அல்லது வேறு
யார் அறிய வல்லவர், தழை ஞானம் இலார்க்கு அறியத் தகுமோ -
பெருகி வளர்ந்த ஞானம் இல்லாதவர்களால் அறிய முடியுமோ, நின்
நீர்மை உணர்ந்தவரே அறிவார் - உன்னுடைய பெருமையை
அறிவுடையவர்களே அறிவார்கள், நீயே அவர் நீர்மை நினைந்து
உணர்வாய் - நீயே அவர்களுடைய பெருமைகளை நினைத்து அறிவாய்,
எந்நீர்மை உனக்கு அரிது என்ன எழுந்து - எந்தச் செயல்கள் உனக்கு
அரியன என்று சொல்லி எழுந்து, இரு பாதம் இறைஞ்சி இருந்தனன் -
இரண்டு திருவடிகளையும் வணங்கிப் பின் இருந்தான்.

     "பாம்பே பாம்பின் காலறியும்" என்ற பழமொழி போலக் கோசிகன்
இயல்பை நீயே யறிந்து கூறினை! உன்னைப்போலத் தவ முனிவர்
தன்மையை யுணர்ந்தவர் யாருளர்? உனக்கு எச்செயல் தான்
செய்தற்கருமையானது! எல்லாஞ் செய்யவல்லாய் நீ! என்று எழுந்து
துதித்துப் பின் காசிமன்னன் அமர்ந்தான்.
                                                    (23)

 
1213. அவ்வா ணகரத் தொருதிங் களிருந்
   தருண்மா முனியைத் தொழுதே விடைகொண்(டு)
எவ்வா றுமறந் துதரிப் பமெனா
   இறையும் மகனும் பிறரும் மெலியச்
செவ்வா ரணவா சியர்கோ னவரைத்
   திருமார் புறவே தழுவிப் பரியுங்
கைவா ரணமும் படையும் மிடையக்
   காசித் திருநா டுபுகுந் தனனே.