பக்கம் எண் :


60

     (இ - ள்.) வந்த மாதவர் ஓதை அம் மன்னவன் கேட்டு - வந்த
பெருந்தவமுனிவரின் ஆரவாரத்தை அந்த அரிச்சந்திர மன்னவன் கேட்டு,
சிந்தையில் பெரு மகிழ் வரச் சென்று எதிர் கொண்டே - மனத்தில்
பெருமகிழ்ச்சி பொங்க விரைந்து எழுந்து போய் எதிர் கொண்டழைத்து,
எம் தம் மாதவம் இன்று வந்து எய்தியது என்னா - எம்முடைய சிறந்த
தவத்தின் பயனே இப்பொழுது பெருந்தவ முனிவர் என் அரண்மனைக்கு
வருமாறு புரிந்தது என்று கூறி, வந்த மாதவர் அடி மலர் முடியுறத்
தொழுதான் - அங்கு வந்த சிறந்த முனிவரின் திருவடித் தாமரைமலர்கள்
தன் முடியிற் பொருந்தும்படி வணங்கினான்.

     மாதவர் : உரிச்சொற்றொடர்; என்னா : செய்யா என்னும் வாய்
பாட்டு வினையெச்சம்; வர : காரணப்பொருட்டாய வினையெச்சம்; அடி
மலர் : உருவகம்.
                                                     (5)

 
110.

தொழுத காலையில் ஆசிகள் அருந்தவர் சொல்லி
முழுது மாமறை முழங்கிட மண்டப முற்ற
வெழுது மாமணி யாதனம் அவ்வவர்க கீந்து
பழுதி லாமொழிமன்னவன் இருந்திவை பகர்வான்.

     (இ - ள்.) தொழுத காலையில் - அரிச்சந்திரன் அடி வணங்கிய
பொழுது, அருந்தவர் ஆசிகள் சொல்லி - செயற்கருந் தவஞ்செய்த
முனிவர் வாழ்த்துகள் கூறி, மா மறை முழுதும் முழங்கிட - சிறந்த
வேதவொலி அரண்மனை முழுதும் முழங்கவும், மண்டபம் முற்ற எழுதும்
மாமணி ஆதனம் அவ்வவர்க்கு ஈந்து - மண்டபம் முழுதும் அழகிய
சிறந்த மணிகள் பதித்த ஆசனங்களை அவரவர்களுக்கு அமைத்து, பழுது
இலா மொழி மன்னவன் இருந்து இவை பகர்வான் - குற்றமற்ற உண்மை
மொழிகளைப் பேசுகின்ற அரசன் தனது சிம்மாசனத்திலிருந்து பின் வரும்
மொழிகளைக் கூறுவான்.

     மாமறை : உரிச்சொற்றொடர்; இலா : ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சம். முனிவர் வேதமொழிகளில் ஆசி கூறினர்.
                                                     (6)

 
111. எந்தத் தேயங்கள் கண்டனி ரெத்திசை புகுந்தீர்
எந்தத் தீர்த்தங்கள் ஆடினீர் புதுமைஎன் கண்டீர்
முந்தக் கூறுமின் என்றரிச் சந்திரன் மொழிய
வந்தக் காலையில் அரசனுக் கருந்தவர் உரைப்பார்.

     (இ - ள்.) எந்தத் தேயங்கள் கண்டனிர் எத்திசை புகுந்தீர் எந்தத்
தீர்த்தங்கள் ஆடினீர் புதுமை என் கண்டீர் முந்தக் கூறுமின் என்று
அரிச்சந்திரன் மொழிய - எத்தேசங்களைப் பார்த்தீர்கள்? எந்தத்
திசைகளெல்லாம் சென்றீர்கள்? நீவிர் நீராடிய புண்ணிய நீர் நிலைகள்
யாவை? என்ன புதுமைகள் கண்டீர்கள்? இவைகளை எனக்கு முதலில்
சொல்லுங்கள் என்று அரிச்சந்திரன் கூற, அந்தக் காலையில் அருந்தவர்
அரசனுக்கு உரைப்பார் - அப்பொழுது பெருந்தவமுனிவர் அரசனுக்குச்
சொல்வார்கள்.