பக்கம் எண் :


63

       விழிச்சிறப்பு விளம்புதல்
117. கடலினைக் கயலைக் கணையைமென் பிணையைக்
   காவியைக் கருவிள மலரை
வடுவினைக் கொடிய மறலியை வலையை
   வாளைவேன் றறவுநீண் டகன்று
கொடுவினை குடிகொண் டிருபுறம் தாவிக்
   குமிழையும் குழையையும் சீறி
விடமெனக் கறுப்புற் றரிபரந் துன்கை
   வேலினும் கூரிய விழியாள்.

     (இ - ள்.) கடலினை கயலை கணையை மென் பிணையை
காவியை கரு விள மலரை வடுவினை - ஒப்புமையில் கடலினையும்
மீனையும் அம்பையும் மென்மையான பெண் மானையும் நீலோற்பல
மலரையும் கருவிளம் பூவையும் மாவடுவிளையும், கொடிய மறலியை
வலையை வாளை வென்று - பார்வையால் ஆடவரைத் துன்புறுத்திக் கவர்வதில் கொடிய எமனையும் வலையையும் வாளையும் வென்று,
அறவும் நீண்டு அகன்று - முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று, கொடு
வினை குடி கொண்டு - கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை
பெற்று, இருபுறந் தாவிக் குமிழையும் குழையையும் சீறி - இரண்டு
பக்கங்களிலும் தாவிக் குமிழம்பூப்போன்ற மூக்கையும் குழையை அணிந்த
காதுகளையும் சினந்து மோதி, விடம் எனக் கறுப்புற்று அரி பரந்து -
நஞ்சு போன்று கருநிறம் பொருந்தி செவ்வரி பரந்து, உன் கை வேலினும்
கூரிய விழியாள் - உனது கையிலுள்ள வேலைக்காட்டிலும் கூர்மையான
கண்களை யுடையவள்.

     மறலி, வலை, வாள் : தொழில் உவமைகள். ஏனைய பண்பு
உவமைகள்; குமிழ் : உவமையாகுபெயர். குழை : தானியாகுபெயர்;
விழியாள் : சினையால் வருபெயர்.
                                                    (13)

       கொங்கைச்சிறப்புக் கூறுவது  
118. இருப்பைவிட் டயனார் நெடிதுநாள் தவம்செய்
   திருகையும் சிந்தையும் வருந்திச்
செருப்பையின் றிறந்த மதனனைச் சூட்டத்
   திருமுடி வேண்டுமென் றியானை
மருப்பையும் கும்பத் தலத்தையும் சக்ர
   வாகத்தை யும்வட கனகப்
பொருப்பையும் படைத்துத் தெளிந்தபின் படைத்த
   புளகித பூரண முலையாள்.

     (இ - ள்.) அயனார் இருப்பை விட்டு நெடிது நாள் தவம் செய்து
இரு கையும் சிந்தையும் வருந்தி - பிரமன் தனது இருக்கையாகிய
தாமரைமலரை விட்டுச்சென்று நெடுநாள் தவஞ்செய்து இரண்டு கைகளும்
மனமும்