பக்கம் எண் :


65

     திருமுகச் சிறப்புச் செப்புதல்
120. செருக்குமோ கனச்செந் திருமகள் உறையும்
   சேயிதழ்த் தாமரை மலரும்
பெருக்குமா மறைநூல் உரைத்தநான் முகத்தோன்
   பிறந்தசெங் கமலமும் வெள்க
முருக்கும்ஆம் பலுமென் காவியும் குமிழும்
   முல்லையும் வள்ளையும் மலர்ந்து
திருக்கிளர் கமலம் இதுவெனச் செவ்வி
   திகழ்வெயர் செறிதிரு முகத்தாள்.

     (இ - ள்.) செருக்கும் மோகனச் செந்திரு மகள் உறையும் சேயிதழ்த்
தாமரை மலரும் - களிப்பினைத் தருகின்ற மயக்கந்தருகின்ற செம்மையான
திருமகள் வாழ்கின்ற சிவந்த இதழ்களையுடைய தாமரைப் பூவும்,
பெருக்கும் மாமறை நூல் உரைத்த நான்முகத்தோன் பிறந்த செங்
கமலமும் வெள்க - விரிவாகிய சிறந்த வேதநூல்களை ஓதுகிற பிரமன்
பிறந்த திருமாலின் உந்திச் செந்தாமரையும் நாணும்படி, முருக்கும்
ஆம்பலும் மென் காவியும் குமிழும் முல்லையும் வள்ளையும் மலர்ந்து
திருக்கிளர் கமலம் இது என - முருக்கம்வபூவும் ஆம்பல் பூவும்
மென்மையான குவளைப்பூவும் குமிழம்பூவும் முல்லை அரும்பும்
பொருந்தியுள்ள வள்ளைக்கொடியில் மலர்ந்துள்ள அழகுவிளங்குகின்ற
தாமரைப் பூ இது என்று சொல்லும்படி, செவ்வி திகழ் வெயர் செறி
திருமுகத் தாள் - பருவ அழகு விளங்குகின்ற வியர்வை பொருந்தியுள்ள
அழகிய முகத்தை யுடையவள்.

     முருக்கு இதழ் - பெண்கள் உதட்டிற்கும், ஆம்பல் - வாயின்
மணத்திற்கும், காவி - கண்களுக்கும், குமிழ்-மூக்கிற்கும், முல்லை அரும்பு
- பற்களுக்கும் உவமை கூறுதல் மரபு. "முருக் கிதழ்க்கனி வாயார் தம்மை
முயங்கிநெஞ் சழியும்போது" "தீங்கனிவாய் கமழும் ஆம்பலம் போது
உளவோ" என்னும் அடிகளைக் காண்க.

     சிறந்த நங்கையின் திருமுகத்து வெயர்வையும் தாமரையின்
நறுந்தேன் போன்று மணம் கமழும் என்பதற்கு வெயர்வையும் உடன்
கூறினார். ஏனைய தாமரைகள் முருக்கு ஆம்பல் முதலிய பூக்களோடு
பொருந்தி மலராமையின் வெள்கின. என என்னும் இடைச்சொல்
உவமப்பொருளில் வந்தது.
                                                    (16)

 
      நடை வனப்பு நவிலுதல்
121. கடிகமழ் மலரும் கவவையும் அழகும்
   கதிர்மணிப் பணிகளும் சுமந்து
கோடியென இசைந்து நிறைவுறப் பூத்த
   கொம்பென அசைந்தசைந் தொல்கி
அடியிணை படியிற் படப்பொறா தஞ்சி
   அன்புறு கடகரிப் பின்போம்
பிடியெனக் கன்னி நடைபயில் அன்னப்
   பெடையென மடநடை பெயர்வாள்.