பக்கம் எண் :


72

ஆல் : அசை. அறிகிலேம் - பகுதி; கு: சாரியை; இல் : எதிர்மறை
இடைநிலை; ஏம்; தன்மைப்பன்மை வினைமுற்று விகுதி.
                                                    (28)

 
    'என்னுயிர் கவர்ந்தனள் பெண்' எனப் புலம்பல்
133. ஒற்றையாழி அம்தேர் சூழிவ் வுலகம்யான் காவல் பூண்ட
அற்றைநாள் முதலாக் கள்ளம் இன்றியே அமர்ந்த தந்தோ
பிற்றைநாள் வலியி னாலோர் பெண்கொடி எந்தம் ஆவி
இற்றைநாள் கரந்து கொண்ட தேழமை எமக்கு மன்னோ.

     (இ - ள்.) ஒற்றை ஆழி அம் தேர் சூழ் இவ்வுலகம் - சூரியனது
ஓர் உருளையையுடைய அழகிய தேரானது சுற்றி வருகின்ற இந்த உலகம்,
யான் காவல் பூண்ட அற்றை நாள் முதலா கள்ளம் இன்றியே அமர்ந்தது -
நான் காவல் புரிந்துவந்த அந்நாள் முதலாகக் களவு என்பது இல்லாமல்
பொருத்தமுற்றிருந்தது, பிற்றை நாள் - இந்தப் பிற்காலத்தில், ஓர் பெண்
கொடி இற்றை நாள் எம் தம் ஆவி வலியினால் கரந்து கொண்டது எமக்கு
ஏழமை மன் - கொடிபோன்ற ஒப்பற்ற பெண் ஒருத்தி இன்று வந்து எனது
உயிரைத் திறம்பட மறைந்து வந்து கொள்ளை கொண்டது எனக்கு மிகவும்
இகழ்வாயிற்று.

     மன் : மிகுதிப்பொருளில் வந்த இடைச்சொல். ஒன்று + ஆழி -
ஒற்றை யாழி; அன்று + நாள் - அற்றை நாள்; பின்று + நாள் - பிற்றை
நாள்; பெண்கொடி : பண்புத்தொகை; பெண்ணாகிய கொடி என்பது
உருவகம். ஓகாரம் : அசை. பெண் கொடி ஆவி கவர்ந்ததனால் அரசன்
காவல் இகழ்வாயிற்றெனக் கானல் தன்மையில் இழிவேற்றிக் கூறுதலின்
குண அவ நுதி அணி.
                                                    (29)

 

      'உள்ளங் கவர்ந்தனை' என்ன உரைத்தல்
134. தனக்குறும் தமர்க்கு றாதான் தனைக்கரந் தரிதில் கொள்ளும்
வனக்குறும் பருக்கு வாகைக் குறுவனோ மயிலே மானே
எனக்குறும் என்று காத்த என்னைவிட் டுன்பால் வந்தால்
உனக்குறும் என்று நீஎன் உள்ளத்தைக் கொண்டா யென்றான்.

     (இ - ள்.) மயிலே மானே - மயில்போன்ற சாயலையுடையவளே!
மான்போன்ற விழியினையுடையவளே!, தனக்கு உறும் தமர்க்கு உறாதான்
தனை - தனக்குப் பயன்பட்டும் பிறர்க்குப் பயன்படாத ஒருவனை, கரந்து
அரிதில் கொள்ளும் வனக் குறும்பருக்கு - மறைத்து வைத்து அவன்
தேடிப் பொருளைத் தங்கள் கொடுஞ்செயலால் திருடிக்கொண்டு போகும்
காட்டு வழிப்பறிக்காரருக்கு, வாகைக்கு உறுவனோ - வெற்றி கிடைக்க
இசைவேனோ?, எனக்கு உறும் என்று காத்த என்னைவிட்டு உன்பால்
வந்தால் - எனக்குப் பயன்படும் என்று எண்ணி என் அகத்து வைத்துக்
காவல் செய்த என் உள்ளம் என்னை விட்டு உன்னிடம் வந்தால், உனக்கு
உறும் என்று நீ என் உள்ளத்தைக் கொண்டாய் என்றான் - உனக்குப்
பயன்படும் என்று நீ எனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய் என்று
கூறினான்.