(இ - ள்.)
மை திகழ் வாரி சூழும் மாநிலத்தோர்கட்கு எல்லாம்
பெய் தவம் பழி பிறங்காப் பிள்ளையைப் பெறுதல் என்பார் - கருமையாக
விளங்குகின்ற கடல்சூழ்ந்த பெரிய உலகில் வாழ்பவர்க்கெல்லாம் நன்மை
பயக்கின்ற தவமாவது பிறரால் பழிக்கப்படாத நற்குணமுடைய பிள்ளையைப்
பெறுதல் என்று சொல்வார்கள், உன் தாதை செய் தவம் அன்று - (நீ
பிறந்தது) உன் தகப்பனார் செய்த தவத்தினால் அன்று, ஆவி கொள்ளும்
களவினிற் பயந்தது எல்லாம் - உயிரையே கொள்ளை கொள்ளும்
கள்ளத்தனத்தில் உன்னைப் பெற்றதெல்லாம், சனனங்கள் தோறும் செய்த
கைதவம் - பிறவிதோறும் உன் தந்தை செய்த வஞ்சகத்தாலானதாகும்
(என்றான்).
இதுவும் குண அவநுதி அணியாகும். மாநிலம் : உரிச்சொற்றொடர்.
"எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின்"
"மகன் உரைக்கும் தந்தை நலத்தை"
"மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும்"
"தக்கார் தகவில ரென்ப(து) அவரவர்
எச்சத்தாற் காணப் படும்"
என்ற ஆன்றோர் வாக்குகளான் இவ்வுண்மை உணர்க.
பயந்த தெல்லாம் : ஒருமைப்பன்மை மயக்கம். பிறங்கா
: ஈறு
கெட்ட எதிர்மறைப்பெயரெச்சம். செய் தவம் : வினைத்தொகை.
(31)