பக்கம் எண் :


74

     (இ - ள்.) அனைய வல்லி - அத்தகைய கொடிபோற் கொடிய
சந்திரமதி, மாறு கொண்டு வாட்டிய வாட்டம் - பகைகொண்டு உயிர்
கவர்ந்து என்னை வாட்டிய வாட்டத்தை எல்லாம், சொல்லி ஆறுதற்கு -
நான் அவளிடம் சொல்லி மனம் ஆறுதற்கு, என்பால் நண்ணி
அணையுமோ - என்னை அடைந்து சேருமோ?, அணைகிலாமல் வேறும்
இப்படியே வாதை விளைக்குமோ - வந்து சேராமல் இன்னும் இத்
தன்மையான துன்பங் கொடுத்துக் கொண்டிருக்குமோ?, விளைக்கும்
வாதை ஏறுமோ குறையுமோ என்று இறைவன் இப்பால் இருந்தனன் -
சந்திரமதியால் உண்டாகும் துன்பம் மிகுமோ அல்லது குறையுமோ என்று
எண்ணிக்கொண்டு அரிச்சந்திரன் அயோத்தியில் இருந்தான்.

     ஓகாரம் : ஐயப்பொருளில் வந்தது; அணையுமோ, விளைக்குமோ,
வாதை ஏறுமோ குறையுமோ என்று இறைவன் இப்பால் இருந்தனன் என
வினைமுடிவு செய்க. என்று - என்று எண்ணி, தனக்குள் கூறி.
                                                    (32)

 
       மதிதயன் அவையில் மாதவர் புகுதல்
137. மானவன் வதுவை சூட்ட மணமொழி வதற்கு நண்ணிப்
போனமா முனிவர் பூகப் பொழிலுடன் பொய்கை நீங்கிக்
கானமும் மலையும் ஆறும் கடந்துகன் னோசி என்னும்
மாநகர் அணுகிக் கொற்ற மதிதயன் சபையிற் புக்கார்.

     (இ - ள்.) மானவன் வதுவை சூட்ட மணம் மொழிவதற்கு
நண்ணிப் போன மா முனிவர் - பெருமைபொருந்திய அரிச்சந்திர
மன்னனுக்குத் திருமணம் செய்வதற்குத் திருமணப்பேச்சு நிகழ்த்தச்
சேர்ந்து சென்ற சிறந்த முனிவர்கள், பூகப் பொழிலுடன் பொய்கை நீங்கி
- கமுகந்தோட்டங்களுடன் அருகிருந்த குளங்களையுங் கடந்து போய்,
கானமும் மலையும் ஆறும் கடந்து - காடுகளையும் மலைகளையும்
ஆறுகளையும் நீங்கி, கன்னோசி என்னும் மாநகர் அணுகி - கன்னோசி
என்று சொல்லப்படும் சிறந்த நகரினை அடைந்து, கொற்ற மதிதயன்
சபையில் புக்கார் - வெற்றிபொருந்திய மதிதய மன்னன் அவையில்
புகுந்தார்கள்.

     என்னும் - என்று சொல்லப்படுகின்ற : செயப்பாட்டு வினைப்
பொருளுணர்த்தும் படு விகுதி தொக்குநின்றது. கொற்றம் - வெற்றி.
போன மாமுனிவர் நீங்கி : கடந்து அணுகி புக்கார் என வினை முடிவு
செய்க.
                                                    (33)

 
           மதிதயன் அவைச் சிறப்பு
138. மேருவை வெளிசெய் தன்ன மேனிலை மணிமா டத்து
வாரிதி எழுந்த தென்ன வந்தவன் தாளைப் போற்றத்
தேரும்யா னையும், ழிந்து திறையிடும் அரசர் நிற்கக்
காரும்நீள் கடலும் போலக் கதிர்மணி முரசம் ஆர்ப்ப.

     (இ - ள்.) மேருவை வெளி செய்து அன்ன - மேருமலையைக்
குடைந்து வெளியிடம் அமைத்தது போலத் தோன்றும், மேல் நிலை மணி