பக்கம் எண் :


76

அந்தணர் சூழவும், பாவலர் கவிகள் பாட - கவிஞர்கள் கவிகள் பாடவும்,
மன்னன் - சந்திரதய அரசன், மகர தோரணக் கீழ் மடங்கல்ஆதனத்து
இருந்தான் - மகரதோரணத்தின் கீழ் சிம்மாசனத்தில் இருந்தான்.
                                                    (36)

 
       மதிதயன் முனிவரை வரவேற்றல்
141. அந்தவோ லக்கம் தன்னில் அருந்தவ முனிவர் எல்லாம்
வந்தனர் வந்த போது மன்னவன் எழுந் திருந்து
சுந்தர மகுடம் தாழத் தொழுதனன் அவனை வாழ்த்திச்
சிந்தையின் மகிழ்ச்சி பொங்க இருந்தபின் செப்ப லுற்றான்.

     (இ - ள்.) அந்த ஓலக்கம் தன்னில் - சந்திரதயன் கொலுவிருக்கும்
சபையில், அருந்தவ முனிவர் எல்லாம் வந்தனர் - செய்தற்கரிய தவம்
புரியும் முனிவர் எல்லாரும் வந்தனர், வந்தபோது மன்னவன் எழுந்திருந்து
சுந்தர மகுடம் தாழத் தொழுதனன் - வந்தபொழுது அரசன் எழுந்திருந்து
அழகிய திருமுடி அவர்கள் திருவடியில் தாழும் படி விழுந்து
வணங்கினான்; அவனை வாழ்த்திச் சிந்தையின் மகிழ்ச்சி பொங்க இருந்த
பின் செப்பலுற்றான் - முனிவர் அரசனை வாழ்த்தி மனமகிழ்ச்சி நிறைந்து
பொங்கத் தங்கள் ஆதனங்களில் இருந்தபிறகு சொல்லத் தொடங்கினான்.

     எழுந்திருந்தான் - எழுந்திரு : பகுதி; த்: சந்தி; த்: இறந்தகால
இடைநிலை ஆன் : ஆண்பால் படர்க்கை வினைமுற்று விகுதி. சந்தி - ந்:
தகரம் நகரமானது விகாரம். அருமை + தவம் - அருந்தவம்.
                                                    (37)

 
     'சென்ற நீர், வந்த செய்தி என்?' எனல்   
142. வானநீர் பொழிந்து முத்த மணிகொழித் தருவி பாய்ந்த
கானநீர் பெருகும் தெய்வக் கண்டகி என்னும் தீர்த்தத்
தானநீர் ஆடி என்தன் தலைக்கடி முடிகள் சூட்டிப்
போனநீர் உடனே மீண்ட அருத்தியென் புகலும் என்றான்.

     (இ - ள்.) வானம் நீர் பொழிந்து முத்தம் மணி கொழித்து அருவி
பாய்ந்த கான நீர் பெருகும் தெய்வக் கண்டகி என்னும் தீர்த்தம் தான
நீராடி - மேகம் மழை பொழிந்து முத்துகளையும் மணிகளையும்
கொழித்துக்கொண்டு அருவிகளாக விழுந்த நீரில் மலைகளின் காட்டு
நீரும் சேர்ந்து பெருகும் தெய்வத்தன்மை வாய்ந்த கண்டகி என்னும்
புண்ணியத் தலத்திலுள்ள ஆற்று நீராடி, என் தன் தலைக்கு அடி
முடிகள் சூட்டிப் போன நீர் - எனது தலைக்குத் தங்கள் திருவடிகளாகிய
பொன்னார் திருமுடிகள் சூட்டிச் சென்ற தாங்கள், உடனே மீண்ட அருத்தி
என்? - உடனே திரும்பியதற்கு விருப்பம் யாது?, புகலும் என்றான் -
சொல்லுங்கள் என்றான்.

     அடி முடிகள் : பண்புத்தொகை. என் : 'எவன்' என்னும் வினாவினை
'என்' என்று ஆயது. முத்தம் மணி : உம்மைத்தொகை; பொழிந்து :
வினையெச்சம் காரணப்பொருட்டு.
                                                    (38)