பக்கம் எண் :


82

     (இ - ள்.) அருந்தவ முனிவர் எல்லாம் - அரிய தவத்தையுடைய
முனிவர்கள் எல்லாரும், அரசனை நோக்கி - அரிச்சந்திர அரசனைப்
பார்த்து, ஐய - ஐயா, மண்ணில் நீ அலால் பெருந்தவம் உடையார்
பிறரும் உண்டோ - உலகில் உன்னையன்றிப் பெரும் புண்ணியசீலர் பிறர்
ஒருவருமில்லை, திருந்து இழை தனை உனக்கே திருமணம் முடிக்கத்
தாதை பொருந்தினன் - திருத்தமாகிய அணிகளையணிந்த சந்திரமதியை
உனக்கே திருமணஞ்செய்யச் சந்திரதயன் இசைந்தான், நீயும் வல்லை
எம்முடன் போதுக என்றார் - நீயும் எங்களுடன் விரைந்து வருவாயாக
என்று சொன்னார்கள்.

     திருந்திழை : அன்மொழித்தொகை. தனை : தன்னை என்பதன்
தொகுத்தல். தன் : பகுதிப்பொருள் விகுதி. போதும், போது : பகுதி; க:
விகுதி எதிர்காலங் காட்டியது. வியங்கோட்பொருளில் வந்தது. சந்திரமதி
மணமகளாக வாய்ப்பாள் என்ற உறுதி தோன்ற.
'பெருந்தவமுடையார்..............பிறரும் உண்டோ' என்றார்.
                                                    (49)

 
    அரிச்சந்திரன் புறப்படலும் அகமகிழ்ச்சியும்
154. என்றினி துரைத்த லோடும் எழுந்தபே ருவகை வெள்ளம்
நின்றினி தோங்க வாகு வலயங்கள் நிமிர்ந்து நீங்கக்
குன்றினும் உயர்ந்த செம்பொற் கோயில்விட் டெழுந்து போந்து
முன்றிலின் வந்து மன்னன் இனையன மொழியல் உற்றான்.

     (இ - ள்.) என்று இனிது உரைத்தலோடும் மன்னன் எழுந்த பேர்
உவகை வெள்ளம் நின்று இனிது ஓங்க - என்று இனிமையாக முனிவர்கள்
சொன்னவுடன் அரிச்சந்திரன் தனது மனத்தில் பொங்கிய பெருமகிழ்ச்சி
வெள்ளம் நிலைபெற்றிருந்தது நன்றாக மேலே பொங்க, வாகுவலயங்கள்
நிமிர்ந்து நீங்க - தோள்கள் விம்மி வாகுவலயங்கள் விட்டுப் போக,
குன்றினும் உயர்ந்த செம்பொன் கோயில் விட்டு எழுந்து போந்து -
மலையினும் உயர்ந்த பொன்ன ரண்மனையை நீங்கிப் போய், முன்றிலின்
வந்து இனையன மொழியல் உற்றான் - முற்றத்தில் வந்து இவ்விதமான
சொற்களைச் சொல்லலானான்.

     முன்றில் - முற்றம். இல் முன் என்பது மாறி முன்றில் என நின்றது.
இது இலக்கணப்போலி. உவகையை வெள்ளமாக உருவகித்தார்.
உவகையால் உடல் பூரித்துத் தோளிலுள்ள வாகுவலயங்களும் அற்று நீங்கின என்க.
                                                    (50)

  அரிச்சந்திரன் தன் அமைச்சரும் படையும் முன்செல ஆணையிடல்
   
155.

கன்னலங் கழனி வேலிக் கன்னோசி நோக்கி இவ்வூர்
மன்னரும் அமைச்சர் தாமும் சேனையும் மாத ராரும்
முன்னரே செல்க வென்னா மொழிந்துசூ தனைக்கண் சாத்தி
வன்னமா மணித்தேர் கொண்டு வருகென அருளிச் செய்தான்.

     (இ - ள்.) கன்னல் அம் கழனி வேலிக் கன்னோசி நோக்கி -
கரும்புகள் விளைகின்ற அழகிய வயல்கள் சூழ்ந்த கன்னோசி நாட்டை
நோக்கி, மன்னரும் அமைச்சர் தாமும் சேனையும் மாதராரும் முன்னரே