பக்கம் எண் :


84

நீர் ஏறிய சங்கம் - நீர்மையில் உயர்ந்த சங்கம். நீர்மை - தன்மை. இது
ஈறுபோய் நீர் என நின்றது. ஏறிய - உயர்ந்த. நீரினின்று வெளியேறிய
சங்கம் எனவும் பொருள் கொள்ளலாம். தடமா : ஒரு பொருட்பன்மொழி.
                                                     (53)

 
  அரசர் பலர் தேரேறி உடன் செல்லல்
158. நற்றே ரினைமன் னனடத் திடவே
சுற்றே றநிரைந் தயல்துன் னினவால்
குற்றே வல்செயும் பலகொற் றவர்தம்
பொற்றேர் சதகோ டிபொருப் பெனவே.

     (இ - ள்.) நல் தேரினை மன்னன் நடத்திட - நல்ல தேரை
அரிச்சந்திரன் செலுத்த, குற்றேவல் செயும் பல கொற்றவர் தம் சதகோடி
பொன் தேர் - அவனுக்குச் சிறிய பணிவிடை புரியும் பல அரசர்களுடைய
நூறுகோடி பொன்னாற் செய்யப்பட்ட தேர்கள், சுற்று - அவனது தேரைச்
சுற்றி, ஏற நிரைந்து அயல் துன்னின - மிகுதியாக வரிசையாகப்
பக்கங்களில் வந்து நெருங்கிச் சென்றன.

     நன்மை + தேர் - நற்றேர். குறுமை + ஏவல் - குற்றேவல் - சிறிய
வேலைகள். துன்னின + ஆல் = துன்னின வால். ஆல் : அசை.
                                                    (54)

 
     அமைச்சர் செல்லுதல்
159.

கவிகைப் படுநீ ழல்கவிப் பமணிச்
சிவிகைத் திரளின் மிசைசென் றனராற்
புவிகைக் கொளமைச் சர்புகழ்த் தரசைக்
குவிகைத் தலமிட் டொருகோ டியரே.

    (இ - ள்.) புவி கைக் கொள் அமைச்சர் ஒரு கோடியர் - தமது
மதிநுட்பத்தால் உலகினைத் தம் வசப்படுத்துகின்ற எண்ணிறந்த
அமைச்சர்கள், அரசைப் புகழ்ந்து குவி கைத்தலம் இட்டு -
அரிச்சந்திரனைப் புகழ்ந்து குவித்த கைகளைத் தலைமேல் வைத்து,
கவிகைப் படு நீழல் கவிப்ப - குடை நிழல் சூழ்ந்து நிழற்ற, மணிச்
சிவிகைத் திரளின் மிசை சென்றனர் - அழகிய மணிகள் பதித்த பல
பல்லக்குகளில் அமர்ந்து போயினர்.

     நீழல் : நீட்டல் விகாரம்; குவிகை : வினைத்தொகை. கவிகை -
குடை. படும் - உண்டாகின்ற. சென்றனர் + ஆல் : அசை.
                                                    (55)

 
  ஆடவரும் மகளிரும் அடுத்துச் செல்லல்
160. வன்னக் குவிமா முலைவல் லியரும்
கன்னற் சிலைவே ளனகா ளையரும்
அன்னத் திர்ளோ டரியின் றிரள்வந்
தென்னக் கடிதெய் தினரெங் கணுமே.