பக்கம் எண் :


86

நடந்தன, வாரணம் விரை சேர் அருவித் திரள் வீழ் பல மால் வரை போல
நடந்தன - மதம் பொழியும் யானைகள் மணமிக்க அருவிக்கூட்டங்கள்
விழுகின்ற பல பெரு மலைகள் போல நடந்தன.

     மதநீர் மிக்கு வடிகின்ற யானைகள் அருவிக்கூட்டங்கள் வீழ்கின்ற
மலைகள் போன்றன. மலைகள் நடத்தல் உலகத்து இன்மையின் இல்
பொருள் உவமை. மற்றவை உள் பொருள் உவமை. இரண்டுங் கலந்த
உவமையணி யமைந்தது இச்செய்யுள்.
                                                    (58)

 
    மாதவர் வான் வழி வருவது
163. கல்லார் நெறிசெல் வதுகால் கள்பொறா
எல்லாம் மிகுவா தனைமே வுமெனாச்
சொல்லா முனமே துறவோர் விரைவிற்
செல்லா நெறியே றினர்சென் றனரால்.

     (இ - ள்.) கல் ஆர் நெறி செல்வது கால்கள் பொறா - கற்கள்
நிறைந்த தரை வழியே செல்வது கால்களை உறுத்தும், எல்லாம் மிகு
வாதனை மேவும் எனா - குதிரை முதலிய ஊர்திகளெல்லாம் மிகுந்த
துன்பத்தைப் பொருந்தும் என்று, துறவோர் சொல்லா முனமே விரைவில்
செல்லா நெறி ஏறினர் சென்றனர் - முற்றத்துறந்த முனிவர்கள்
அரிச்சந்திரன் சொல்வதற்கு முன்னமே விரைந்து வான் வழியே ஏறிச்
சென்றனர்.

     எனா - என்று கருதி : செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.
சொல்லா : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். முனம் என்ற காலப்பெயர்
கொண்டு முடிந்தது. முனம் : முன்னம் என்றதன் தொகுத்தல். ஏறினர் :
சென்றனர் - ஏறிச்சென்றனர் எனப் பொருள் தருதலால் ஏறினர் என்பது
முற்றெச்சம்.
                                                    (59)

 
          குடைச் சிறப்பு
164.

பலவெண் குடையும் பவளக் குடையும்
குலவும் பலசெம் மணியின் குடையும்
உலவும் கதிரும் சதகோ டியுவா
நிலவும் மெனவெங் குநிறைந் தானவால்.

     (இ - ள்.) பல வெண் குடையும் பவளக் குடையும் குலவும் பல
செம் மணியின் குடையும் - பல வெண்கொற்றக் குடைகளும் பவளக்
குடைகளும் விளங்குகின்ற மாணிக்கக் குடைகளும், உலவும் சதகோடி
கதிரும் உவா நிலவும் என எங்கும் நிறைந்தன - வானில் உலவுகின்ற
நூறுகோடி சூரியரும் சந்திரரும் போன்று எல்லா இடங்களிலும் நிறைந்து
நின்றன.

     ஆல் : அசை. சதகோடி கதிரும் சதகோடி யுவா நிலவும் எனக்
கூட்டுக. வெண் குடை யுவா நிலவாகவும், பவளக்குடையும் மணிக்
குடையும் கதிராகவும் கொள்க; நிலவின் ஒளி வெண்மையானது
கதிரினொளி செம்மையானது ஆதலால்.
                                                    (60)