பக்கம் எண் :


88

கரம் + வாளம் - கை வாள். வாள் + அம் = வாளம் -அம் : சாரியை.
ஏதி - பெரிய வாள். கர வாளம் - சிறு வாள். கொழு - ஆயுத வகையுள்
ஒன்று.
                                                    (63)

 
        ஆயுதச் சிறப்பு
168. மீயுற் றுடனொற் றியவெம் படையின்
வாயுற் றெழுவெம் பொறிமண் டுவநீள்
வேயுற் றபெருங் கிரிமீ தெரியும்
தீயுற் றனவொத் தனசே ணளவும்.

     (இ - ள்.) மீ உற்று உடன் ஒற்றிய வெம் படையின் வாய் உற்று
எழு வெம் பொறி மண்டுவ - மேலே பொருந்தி ஒன்றோடொன்று உரசிய
கடுமையான ஆயுதங்களின் வாய்களிலிருந்து எழுகின்ற தீப்பொறிகள்
மண்டுவன, நீள் வேய் உற்ற பெருங் கிரிமீது சேண் அளவும் எரியும் தீ
உற்றன ஒத்தன - நீண்ட மூங்கில்கள் பொருந்திய பெரிய
மலைகளின்மேலே வானளவும் பற்றி எரிகின்ற நெருப்புப் போன்றன.

     ஆயுதங்கள் ஒன்றோடொன்று உரசித் தீப்பற்றுவது மலையிலுள்ள
மூங்கில்கள் ஒன்றோடொன்று உராய்ந்து தீப்பற்றி எரிவதுபோலத்
தோன்றும். மண்டுவ : எதிர்கால வினையாலணையும் பெயர்.
                                                    (64)

 
  தேரேறி வருங் காரிகையார் வனப்பு
169.

நலிவுற் றுநுடங் கிடைநன் னுதலார்
பொலிவுற் றணிதேர் மிசைபோ யினரார்
கலியுற் றெழுநீள் கனகக் கிரிமேல்
மலிவுற் றெழுவஞ் சிகண்மா னுமென.

     (இ - ள்.) ஆர் கலி உற்று எழு நீள் கனகக் கிரிமேல் மலிவுற்று
எழு வஞ்சிகள் மானும் என - ஒலிக்கின்ற கடலிடைத் தோன்றி எழுகின்ற
உயர்ந்த பொன்மலைகளின்மேலே மிகுதியாக எழுகின்ற வஞ்சிக்கொடிகள்
போன்றன எனும்படி, நலிவுற்று நுடங்கு இடைநல் நுதலார் பொலிவுற்று
அணி தேர் மிசை போயினர் - சுருங்கித் துவளுகின்ற இடையையுடைய
பெண்கள் பொன்போல் விளங்குகின்ற அழகிய தேர்மேல் ஏறிச் சென்றனர்.

     கடலிடைத் தோன்றிப் பொன் மலைமேற் படர்ந்தெழும் வஞ்சிக்
கொடிகளைப் போலத் தேரின்மேலேறிச் சென்றனர் மங்கையர் என்க. ஆர்
கலி - கடல். இது வினைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழி.
படையைக் கடலாகக் கொள்க.
                                                    (65)

 
  யானைமேல் வரும் மானினியார்
170. கருமா முகிலன் னகவின் குழலார்
பெருமால் கரியின் பிடர்மேல் வருமா
றிருமா முகிலுக் கிடையே எழுமின்
வருமா றுநிகர்த் தனவை யமெலாம்.