பக்கம் எண் :


89

     (இ - ள்.) கரு மா முகில் அன்ன கவின் குழலார் - கருமையான
நீண்ட மேகம்போன்ற அழகிய கூந்தலையுடைய பெண்கள் பெரு மால்
கரியின் பிடர் மேல் வரும் ஆறு - பெரிய கரிய யானையின் பிடரிமேல்
வருகின்ற விதம், வையம் எலாம் இரு மா முகிலுக்கு இடையே எழுமின்
வருமாறு நிகர்த்தன - உலகத்தில் எல்லா இடங்களினும் இரண்டு பெரிய
மேகத்தின் நடுவே எழுந்து மின்னல் வருந் தன்மையை ஒத்தன.

     எலாம் : தொகுத்தல். மா - பெருமை. வையம் எலாம் - பூமியில்
எங்கும், கரு மா முகிலன்ன கவின் குழலார் என்று கூறியது அம்
மங்கையர் கூந்தலை ஒரு மேகமாகக் கொள்ளும்பொருட்டேயாம். யானை
ஒரு மேகமாகவும் மங்கையர் கூந்தல் ஒரு மேகமாகவும் அவர் உருவ ஒளி
மின்னலாகவும் கொள்க.
                                                    (66)

 
     பரிமேல் வரும் பாவையர்
171. விலையுன் னரிதா கியவெம் பரிமேற்
சிலைநன் னுதலார் பலர்சென் றனரால்
உலையும் புனல்வா ரியில்ஊ தையினால்
அலையும் திரைமேல் வரும்அன் னம்என.

     (இ - ள்.) உலையும் புனல் வாரியில் ஊதையினால் அலையும்
திரை மேல் வரும் அன்னம் என - தத்தளிக்கின்ற நீர் நிறைந்த கடலில்
காற்றினால் அசைகின்ற அலைமேல் வருகின்ற அன்னங்கள் என்னும்படி,
விலை உன் னரிதாகிய வெம் பரி மேல் சிலை நன்னுதலார் பலர் சென்றனர்
- விலைமதிக்கமுடியாத கடுவேகமுள்ள குதிரைகளின்மேல் வில்லை ஒத்த
நல்ல நெற்றியையுடைய பெண்கள் பலர் போனார்கள்.

     'உன்ன' என்ற வினையெச்சத்து அகரம் தொக்கது : உன்ன +
அரிது = உன்னரிது. அலைமேல் அன்னம் வருங் காட்சிபோலப் புரவி
மேற் போயினர் மாதர் என்க. குதிரை தாவிச்செல்லுந் தோற்றம் கடலில்
மேலெழுந்து அலை வருந் தோற்றத்தை யொத்தது.
                                                    (67)

 
     சரயு நதியைக் கடத்தல்
172. பரிதுன் னநெடும் படைதுன் னமத
கரிதுன் னவிழிந் துகடந் தனனால்
விரிகின் றசெழுஞ் சுடர்வெண் டரளம்
சரிகின் றபுனற் சரயுத் தனையே.

     (இ - ள்.) பரி துன்ன நெடும் படை துன்ன மத கரி துன்ன -
குதிரைகளும் பெருஞ் சேனைகளும் மத யானைகளும் ஆற்றில் இறங்கி
நெருங்கிச் செல்ல, வரிகின்ற செழுஞ் சுடர் வெண் தரளம் சரிகின்ற புனல்
சரயுத்தனை - பரந்த பேரொளி விளங்கும் வெண்முத்துக்களைக்
கொழிக்கின்ற நீரையுடைய சரயு ஆற்றினை, இழிந்து கடந்தனன் - தானும்
சிவிகையினின்று இறங்கி நடந்து கடந்தான்.

     தெய்வநதியாதலின் யாவரும் இறங்கிச் செல்லப் பேரரசனாகிய
அரிச்சந்திரனும் ஊர்தியினின்று இறங்கிச் சென்றனன் என்பதாம். ஆல் :