பக்கம் எண் :


90

அசை; செழுஞ்சுடர், வெண் தரளம் : பண்புத்தொகைகள். சரயு + தன் +
ஐ + ஏ - சரயுத்தனையே. தன் : சாரியை; ஐ : இரண்டனுருபு. ஏகாரம் :
ஈற்றசை. அரிச்சந்திரன் என்ற எழுவாய் வருவித்து. துன்ன சரயுத்தனையே
கடந்தனன் என வினை முடிவு செய்க.
                                                    (68)

 
  கரையில் வாளைமீன் தாவிய புதுமை
173. விரையே றியதார் புனைவே லிறைவன்
நிரையே றுமனீ கநெருக் குதலால்
தரையே றியதண் புனறள் ளநெடும்
கரையே றியவா ளைகணக் கிலவே.

     (இ - ள்.) விரை ஏறிய தார் புனை வேல் இறைவன் நிரை ஏறும்
அனீகம் நெருக்குதலால் - மணம் மிகுந்த மாலை அணிந்த வேலேந்திய
அரிச்சந்திர அரசனுடைய வரிசையாக ஏறிச் சென்ற சேனைகள்
நெருக்குவதால், கணக்கில வாளை - எண்ணிறந்த வாளை மீன்கள், தரை
ஏறிய தண் புனல் தள்ள நெடுங்கரை ஏறிய - தரையில் மோதுகின்ற
குளிர்ந்த நீரினால் தள்ளப்பட்டு நீண்ட கரைகளில் ஏறின.

     ஏகாரம் : ஈற்றசை. வேல் : காரணப்பெயர். அனீகம் - படை
வகுப்பு, சேனையின் வரிசை. கரி, பரி முதலிய சேனைகளுடன் மாந்தரும்
நதியிலிறங்கியபோது அங்குள்ள வாளைமீன்கள் இருக்க இடமின்றிக்
கரையில் ஏறின என்க. விரை - மணம். விரையேறிய தார் புனைந்த வேல்
எனக் கொள்க. வேலுக்கு மாலை சூட்டுவது மரபு.
                                                    (69)

 
   ஆடவர் மகளிர் நெருக்க நிகழ்ச்சி
174. அரியன் னவர்மின் அனையார் கள்தனம்
நெறியும் படிதுன் னிநெருக் குதலால்
பரியும் பணிமா லைகள்டார்க் கிலர்கீழ்ச்
சரியும் மணிமே கலைதா மறியார்.

     (இ - ள்.) அரி அன்னவர் - சிங்க ஏறுபோன்ற ஆடவர்கள், மின்
அனையார்கள் தனம் நெறியும்படி துன்னி நெருக்குதலால் - மின்னலை
ஒத்த பெண்களின் கொங்கைகள் அமுங்கும்படி அணுகி வந்து
நெருக்குதலினால், பரியும் பணி மாலைகள் பார்க்கிலர் - அறுந்து உதிரும்
வேலைத்திறனமைந்த மாலைகளையும் நோக்காதவராய், கீழ்ச்சரியும்
மணிமேகலை தாம் அறியார் -மணிகள் கோக்கப்பெற்ற மேகலைகள் கீழே
சரிந்து விழுவதையும் தெரியாதவராய்ச் சென்றனர்.

     பார் : பகுதி; கு : சாரியை; இல் : எதிர்மறை இடைநிலை; அர் :
பலர்பால் விகுதி.

     ஆடவர் மிகவும் வலியவர் என்பது தோன்ற, 'அரி யன்னவர்'
என்றார். அரி - சிங்கம். கொங்கைகள் அமுங்கும்படி நெருக்கியபோது
ஆபரணங்களும் பூமாலைகளும் மணிமேகலையும் சரிந்து விழுந்தன
என்பது, செல்வப்பெருக்குடையர் ஆதலால் அவைகளை நோக்காதே
சென்றனர் எனக் கொள்க.
                                                    (70)