பக்கம் எண் :


92

     யானைமேலிருந்த ஒரு பெண் அவ் யானை விரைந்து துள்ளிச்
சென்றதாற் கீழே விழுந்து எழுந்து நின்றனள் எனவும், அடுத்து நின்ற
ஆடவன் யானையை நிறுத்துவதற்காக விரைந்து செல்லும் போது
நெருக்கத்தால் யானை யென்றே கருதி அப் பொண்ணைக் கட்டினன்
என்றும் கொள்க. அறியாத பிழையாகக் கொள்க. யானையை நிறுத்தி
முன்னிருந்தவாறே அப்பெண்ணை யானைமே லேற்றுவிக்கலாம் என்ற
குறிப்புடன் சென்றதாகக் கொள்க.
                                                    (72)

 
  கோமதியாற்றினைக் குறுகுதல்
177. ஆடுங் கழன்மன் னனநே கருடன்
நாடுந் தருவும் பலநண் ணிநெடும்
காடுங் கிரியும் பலகண் டுநடந்
தோடுங் குளிர்கோ மதிஉற் றன்னால்.

     (இ - ள்.) ஆடுங் கழல் மன்னன் அநேகருடன் - அசைகின்ற
வீரக்கழல்களையுடைய அரிச்சந்திரன் அநேக சேனைகளுடன், பல நாடும்
தருவும் நண்ணி - பல நாடுகளையும் சோலைகளையும் அடைந்து, பல
நெடுங் காடும் கிரியும் கண்டு - பல பெரிய காடுகளையும் மலைகளையும்
பார்த்து, நடந்து ஓடும் குளிர் கோமதி உற்றனன் - பீடு பெற நடந்து
ஓடுகின்ற குளிர்ந்த நீரையுடைய கோமதி ஆற்றினை அடைந்தான்.

     ஆல் : அசை. உம்மைகள் : எண்ணும்மை. உற்றனன் - உறு : பகுதி
அன் : சாரியை. அன் ; ஆண்பால் விகுதி. பகுதி ஒற்று இரட்டித்து
இறந்தகாலங் காட்டியது. குளிர் கோமதி : வினைத்தொகை.
                                                    (73)

 
  கோமதி ஆற்றங்கரையில் அரசன் படை தங்குதல்  
178. கானயா றனைத்தையும் கடந்து கொளசிக
மானயா றாயகோ மதியை நண்ணியே
யானையும் இரதமும் இவுளியீட் டமும்
சேனையும் மன்னனும் சென்றி றுத்தவே.

     (இ - ள்.) கான யாறு அனைத்தையும் கடந்து - காட்டாறெல்லாங்
கடந்து, கௌசிக மான ஆறாகிய கோமதியை நண்ணி - கௌசிகப் பெயர்
கொண்ட சிறந்த கோமதி ஆற்றை அடைந்து, யானையும் இரதமும் இவுளி
யீட்டமும் சேனையும் மன்னனும் சென்று இறுத்த - யானை தேர் குதிரைத்
தொகுதி காலாள் ஆகிய நால்வகைப் படையும் அரசனும் போய்த் தங்கின.

     இறுத்த என மிகுதிபற்றி அஃறிணை வினைகொண்டு முடிந்தது :
இறு+த்+த்+அ : இறுத்த. அந்நாட்டிற் பல காட்டாறுகள் செல்கின்றன
என்பதும், பெருமை பெற்றது கோமதி யாறு என்பதும் விளங்க 'கானயா
றனைத்தையும்' என்றும், 'மான யாறாய கோமதி' என்றும் கூறினர்.
                                                    (74)