பக்கம் எண் :


94

தண்டர ளம்வளை தவழு மாநதி
வண்டலி லிடமற வந்தி றுத்தவே.

     (இ - ள்.) மண்டல வேந்தரும் மாதர் ஈட்டமும் திண் திறல்
அமைச்சரும் சேனை வெள்ளமும் - உலக அரசரும் பெண்களின்
கூட்டமும் வலிமை பொருந்திய அமைச்சரும் சேனைகளின் கூட்டமும்,
தண் தரளம் வளை தவழும் மாநதி வண்டலில் இடம் அற வந்து இறுத்த
- குளிர்ந்த முத்துக்களை ஈனும் சங்குகள் தவழும் சிறந்த கோமதி ஆற்றின்
செழிப்பான கரையின் மணல் மேட்டில் வெற்றிடமில்லாமல் நிறையத்
தங்கின.

     மாநதி : உரிச்சொற்றொடர் : ஏ: ஈற்றசை; உம்மைகள் எண்ணும்மை.
வேந்தரும், மாதரீட்டமும், அமைச்சரும் சேனை வெள்ளமும் என
உயர்திணையும் அஃறிணையும் விரவி அஃறிணை முடிபாகிய 'இறுத்த'
என்ற வினைமுற்றைக்கொண்டு முடிந்தது. மிகுதி சேனையாதலால் அதன்
வினையாக முடிந்தது. தண்மை + தரளம் = தண்டரளம். மை விகுதி கெட்டு
வருமொழித் தகரம் டகரமாகத் திரிந்து முடிந்தது.
                                                    (77)

 
    கூடாரம் அமைத்துக் குலவியிருத்தல்
182. பட்டினும் மணியினும் படங்க மைத்துவிண்
முட்டிய செம்பொனின் முடிகள் வைத்துமேற்
கட்டியும் பதாகையும் கட்டி நீடிரை
விட்டனர் மன்னரும் மின்ன னாருமே.

     (இ - ள்.) மன்னரும் மின்னனாரும் - அரசர்களும் மின்னலை
ஒத்த பெண்களும், பட்டினும் மணியினும் படங்கு அமைத்து - பட்டினாலும்
மணியினாலும் கூடாரங்கள் அமைத்து, விண் முட்டிய செம்பொனின்
முடிகள் வைத்து - ஆகாயத்தை அளாவியிருக்கின்ற செம்பொன்னாலாகிய
தூபிகள் வைத்து, மேற்கட்டியும் பதாகையும் கட்டி நீள்திரை விட்டனர் -
மேற்கட்டிகளும் கொடிகளும் கட்டி நீண்ட திரைகளும் சுற்றிக்
கட்டினார்கள்.

     நீள் + திரை - நீடிரை, 'ணளமுன் டணவும்' என்றபடி தகரம்
டகரமாய்த் திரிந்தவிடத்து வினைத்தொகையில் ளகரம் கெட்டது.
கூடாரங்கள் அமைத்து ஆடவரும் பெண்டிரும் அமர்ந்திருந்தனர் என்க.
                                                    (78)

 
  பலவகை மரங்களிற் பரி கரி கட்டுதல்
183. சண்பகத் தருவினும் சந்த னத்தினும்
திண்பணை அகிலினும் தேவதா ரத்தும்
தண்பரும் பலவினும் தாறு பாய்பசும்
புண்படு கரிகளும் பரியும் பூட்டினார்.

     (இ - ள்.) சண்பகத் தருவினும் சந்தனத்தினும் திண் பணை
அகிலினும் தேவதாரத்தும் தண் பரும் பலவினும் - சண்பகம் சந்தனம்
உறுதியான