பக்கம் எண் :


95

கிளைகளையுடைய அகில் தேவதாரம் குளிர்ந்து பருத்த பலாமரம்
முதலியவைகளில், தாறு பாய் பசும் புண்படு கரிகளும் பரியும் பூட்டினார்
- அங்குசம் பாய்ந்ததனால் உண்டாகிய பசும்புண்பட்ட யானைகளையும்
குதிரைகளையும் கட்டினார்கள்.

     நறுமணமுள்ள மரங்களில் யானைகளையும் புரவிகளையும் பூட்டினர்,
அவைகளும் மணமுடையவாய் இருக்குமாறு கருதி. நறுமணத்தை மக்கள்
விழைவது இயற்கையன்றோ! சண்பகம் சந்தனம் முதலாக இங்குக்
கூறப்பட்டவை மணமுடையன.
                                                    (79)

 
  மங்கையருடன் மைந்தர் கூடுதல்
184. நிலைமரம் பிளந்திட நிவந்து குத்திய
கொலைமத யானையின் கோடு போலவே
சிலைமத னனையவர் மார்பிற் றேனனார்
முலைமத யானையின் கோடு மூழ்கின.

     (இ - ள்.) நிலை மரம் பிளந்திட - அங்கே நிற்கின்ற மரம் பிளந்து
விடும்படி, நிவந்து குத்திய கொலை மத யானையின் கோடு போல -
உயர்ந்து குத்தின கொலை செய்கின்ற மதயானையின் கொம்புகள் போல,
சிலை மதன் அனையவர் மார்பில் - கரும்பு வில்லேந்திய மன் மதனை
ஒத்த ஆடவர் மார்பில், தேன் அனார் முலை மத யானையின் கோடு
மூழ்கின - தேன்போன்ற மொழியினையுடைய பெண்களின் முலையாகிய
மதயானைக் கொம்புகள் அழுந்தின.

     மரம் ஆடவர்க்கும் யானைக்கொம்பு மாதர் முலைக்கும் உவமை
யாயின உவமையணி. யானைக்கொம்புகள் மரங்களில் பாய்ந்தன.
அவைபோன்ற கொங்கைகள் ஆடவர் மார்புகளிற் பாய்ந்தன. இர
வாதலால் ஆடவரும் மங்கையரும் புணர்ந்து இன்பந்துய்த்தனர் எனவும்,
யானைகள் இரவில் மரங்களைக் கொம்பினாற் குத்திக் குலைத்தன எனவும்
கொள்க.
                                                    (80)

 
185. மோதுகொண் டலைப்பொரு மூரி யானைதம்
மீதுகொண் டலைத்தமெய்ம் மெலிவு மாறவே
தாதுகொண் டலைகுழல் தைய லார்முலை
வேதுகொண் டொற்றினார் வீரர்மீ தெலாம்;

     (இ - ள்.) மோது கொண்டலைப்பொரு மூரியானை மீதுகொண்டு
அலைத்த மெய்ம் மெலிவு மாற - வானத்தில் விரைந்து ஒன்றோடு ஒன்று
மோதுகின்ற மேகத்தை ஒத்த பெரிய யானை மேலிருந்து கொண்டு
அவைகளை நெடுந் தூரம் விரைந்து செலுத்திய யானை வீரரின் உடல்
மெலிவு மாறும்படி, தாது கொண்டு அலை குழல் தையலார் வீரர்மீது எலாம்
தம் முலை வேது கொண்டு ஒற்றினார் - பூந்தாது கொண்டு மலர்கள்
அசைகின்ற கூந்தலையுடைய பெண்கள் யானைவீரர்மேலெல்லாம் தங்கள்
வெம்மையான தனங்களைக்கொண்டு ஒற்றினார்கள்.