பக்கம் எண் :


96

எலாம் : தொகுத்தல். உடலின் வலி தோன்றினும் புண்கள் இருப்பினும்
அவற்றிற்கு வேது கொடுத்தல் உலகியல்பு, வேது கொடுத்தல், வெப்பமான
பொருள்களை யொற்றுதல். யானைமேலேறி வந்த வீரர்கள் உடல் மெலிந்து
வலி குறைந்து நோம் என்று வேது கொடுத்தது போலிருந்தது அவர்கள்
அவ் வீரரோடு புணர்ந்தது என்பது கருத்து.
                                                    (81)

 
     குளிர் காய நெருப்பு மூட்டல்
186.

அகிலொடு சந்தனத் துணியி னாக்கிடு
துகில்பொதி மணிபுரை எரியும் தூமமும்
திகிலெனப் பலபல செக்கர் வானம்வெண்
முகில்பொதிந் தனஎன மூண்டெ ழுந்தவே.

     (இ - ள்.) அகிலொடு சந்தனத் துணியின் ஆக்கிடு துகில் பொதி
மணி புரை எரியும் தூமமும் - அகிற்கட்டைகள் சந்தனக்கட்டைத்
துண்டுகள் இவைகளால் மூட்டப்பட்ட புகை நிறத் துணியிலே பொதிந்துள்ள
மாணிக்கக்கல் போன்ற நெருப்பும் புகையும், திகிலென - கண்டார் திகில்
அடையும்படி, பல பல செக்கர் வானம் வெண் முகில் பொதிந்தன என -
வானத்தில் பல இடங்களிலும் செவ் வானத்தை வெண்மையான மேகங்கள்
மூடியனபோல, மூண்டு எழுந்த - மேலும் மேலும் மூண்டு எழுந்தன.

     நெருப்பு செவ்வானம் போலவும் புகை வெண்முகில் போலவும்
தோன்றின. துகில் பொதி மணி புரை என்றது எரிக்குமட்டும் உவமையாம்.
பல பல இடங்களிற் குளிர் காய்வதற்காக அகிற்கட்டை சந்தனக்
கட்டைகளில் நெருப்பு மூட்டினர். அவை பல பல இடங்களிற்
செவ்வானமும் வெண் முகிலும் தோன்றினவென்று கூறும்படி
காட்சியளித்தன என்க. ஏ : ஈற்றசை. எழுந்த + ஏ = எழுந்தவே என
உடம்படு மெய் பெற்று நின்றது.
                                                    (82)

 
     கூடார விளக்கொளி
187. ஆறிலா தணிபடங் கத்து ளேற்றிய
மாறிலாத் துளங்கெழின் மணிவி ளக்கொளி
தேறலாந் தகைமைய சிலம்பி நூல்பொதி
தூறெலா மின்மினித் தோற்றம் என்னவே.

     (இ - ள்.) ஆறு இலாத அணி படங்கத்துள் ஏற்றிய - நுழைதற்கு
ஒரு வாயில் அல்லது வேறு வழியில்லாத அழகிய கூடாரத்துள்
ஏற்றிவைக்கப்பட்ட, மாறு இலாத் துளங்கு எழில் மணி விளக்கொளி -
காற்றாகிய பகை இல்லாமல் விளங்குகின்ற அழகிய விளக்குகளின்
ஒளியானது, சிலம்பி நூல் பொதி தூறு எலாம் மின்மினி தோற்றம் என்ன
- சிலந்தியால் கட்டப்பட்ட நூல் வலையில் அடிப்பக்கத்தில் பற்றியிருக்கும்
மின்மினிப் பூச்சியின் காட்சிதான் இது என்று, தேறலாம் தகைமைய -
தெளிந்து கூறலாம் தன்மையவாய்த் தோன்றின.