பக்கம் எண் :


97

கூடாரத்துள் ஏற்றிய மணிவிளக்குகளின் தோற்றம், சிலம்பி நூல்
கட்டப்பட்ட புதர்களில் மின்மினி பற்றியிருந்த காட்சி போன்றது என்பது.
இலாத என்பதில் அகரந்தொக்கது. மாறு + இலா = மாறிலா. இது, இலா :
ஈறுகெட்டு நின்ற எச்சம்.
                                                    (83)

 
           நிலாத் தோற்றம்
188. குசைநெடும் கடும்பரிக் கொற்ற மன்னவன்
வசையிலா நம்குல மடந்தை மாமுலைக்
கிசைவனோ வென்றுவந் தெட்டிப் பார்த்தெனத்
திசையெலாங் கதிர்விரித் தெழுந்த திங்களே.

     (இ - ள்.) குசை நெடும் கடும் பரிக் கொற்ற மன்னவன் - கடி
வாளத்தையுடைய நீண்ட வேகமான குதிரைகளையுள்ள வெற்றிவேலனாகிய
அரிச்சந்திரன், வசை இலா நம் குல மடந்தை மா முலைக்கு இசைவனோ
என்று வந்து எட்டிப் பார்த்து என - குற்றமற்ற நம் குல மங்கை
சந்திரமதியின் பெருந்தனங்களுக்குப் பொருத்தமானவனோ என்று
கூடாரத்தில் வந்து எட்டிப் பார்ப்பதுபோல; திங்கள் திசை எலாம் கதிர்
விரித்து எழுந்த - முழுமதி எண்டிசையும் நிலாக் கதிர் பரப்பி எழுந்தது.

     எழுந்தது என்றதன் ஒன்றன்பால் விகுதி தொக்கது; மா முலை :
உரிச்சொல் தொடர். ஏகாரம் : ஈற்றசை.

     சந்திரமதி என்பவள் சந்திரகுலத்து மன்னனாகிய மதிதயன்
மகளாதலால் சந்திரன் 'நம் குல மடந்தை' என்று கருதினன் என்று
கொள்க.
                                                    (84)

 
       வெண்ணிலா வண்ணம்
189. செங்கய லனையகட் டெரிவை தன்றிரு
மங்கல முணர்ந்துமண் மடந்தை யட்டதோர்
பங்கமி லிரசிதப் பானை மேல்வழி
பொங்கலிற் புதுநிலாப் பொலிந்த தெங்குமே.

     (இ - ள்.) மண் மடந்தை - பூமியாகிய பெண் (பூமாது), செங்கயல்
அனைய கண் தெரிவை தன் திரு மங்கலம் உணர்ந்து - செவ்வரி பரந்த
மீன் போன்ற கண்களையுடைய சந்திரமதியின் திருமணத்தை அறிந்து, ஓர்
பங்கம் இல் இரசிதப் பானை அட்டது மேல் வழி பொங்கலின் - ஒரு
குற்றமற்ற வெள்ளிப்பானையிற் காய்ச்சிய பால் மேல் பொங்கி
வழிவதுபோல, எங்கும் புது நிலாப் பொலிந்தது - எல்லா இடங்களிலும்
புது நிலாப் பொலிவுடன் பரந்தது.

     செங்கயல் : பண்புத்தொகை. ஈறு போதல்; முன்னின்ற மெய் திரிதல்
: அட்ட - அடு : பகுதி; ஏகாரம் : ஈற்றசை. மண் மகள் சந்திரமதியின்
திருமணத்திற்கு வெள்ளிப்பானையிற் காய்ச்சிய பால்மேலிருந்து
வழிவதுபோல நிலவு பரந்தது என்பது.
                                                    (85)