கடவாயென்று கேட்ப, தேவராசன் - இலாந்தவகல்பத்துத்
தேவேந்தினாகிய ஆதித்யாபன், நின்ற - நிலைபெற்ற, நின் -
உன்னுடைய, வெகுளி - கோபமாகிய, வெப்பம் - வெதுப்பத்தை,
கருணையால் - தயவாகிய ஜலத்தால், அவித்து - அவியப்பண்ணி,
நின்று - ஸ்வஸ்தபாவத்தில் நிலையாகி, வென்றவர் -
கருமங்களைவென்ற சஞ்சயந்தபட்டாரகரை, பணிந்து - வணங்கி, வா -
வரக்கடவாய், (அப்படி வருவையேயாமாகில்) நீவினவியது - நீகேட்ட
ஸமாசாரத்தை, உரைப்பன் - (அப்போது) சொல்வேன், என்றான் -
என்று சொன்னான், எ-று. (81)
222. என்றலு நின்ற கோபத் தெரிமழை யிடருற் றாப்போல்
அன்றவன் சொன்ன வின்சொன் மாரியா லவிந்த தாங்கண்
சென்றது தெளிவு சிந்தை சினவரன் சரண மூழ்கி
நின்றனன் கமலமாதித் தாபனேர் பட்ட தொத்தே.
(இ-ள்.) என்றலும் - என்று சொன்னவுடனே, நின்ற -
நிலைபெற்ற, கோபத்து - கோபத்தாலுண்டாகிய, எரி - அக்கினியானது,
மழை - மழையினால், இடருற்றாப்போல் - கெட்டதுபோல, அன்று -
அப்பொழுது, அவன்சொன்ன - அத்தேவனால் சொல்லப்பட்ட,
இன்சொல்மாரியால் - இனியவசனமாகிய மழையினால், அவிந்தது -
கெட்டு நீங்கிற்று, ஆங்கண் - அப்படியாமிடத்து, தெளிவு -
தெளிவானது, சிந்தை - அவன் மனதில், சென்றது - அடைந்தது,
(அவ்வாறாகவே அவன்) சினவரன் - ஜிநேஸ்வரனது, சரணம் -
பாதங்களில், மூழ்கி - படிந்து வணங்கி, கமலம் - தாமரைப்பூவானது,
ஆதித்தாபன் - சூரியனுடைய, நேர் - எதிரில், பட்டதொத்து -
அடைந்து மலர்ந்ததுபோல், நின்றனன் - (ஆதித்யாபதேவனுக்கெதிரில்)
நின்றான், எ-று. (82)
223. நின்றவன் றன்னை நோக்கி முனிவனு நீயு நானும்
மின்றிகழ் தந்த னோடும் விரும்பிய மனத்த ராகிச்
சென்றவப் பிறவி தொட்டு வந்தன மின்று காறும்
ஒன்றுமெஞ் சாமை கேணீ யுரைக்கின்றே னுரகர் கோவே.
(இ-ள்.) நின்றவன்தன்னை - அப்படி நின்றவனை, நோக்கி -
பார்த்து, முனிவனும் - இச்சஞ்சயந்தனும், நீயும் - நீயும், நானும் -
நானும், மின் - பிரகாசமானது, திகழ் - விளங்காநின்ற, தந்தனோடும் -
இவ்வித்துத் தந்தனோடும், விரும்பிய மனத்தராகி, விருப்பங்கொண்ட
மனத்தை யுடையவர்களாகி, சென்ற - முன் சென்ற, அப்பிறவிதொட்டு
- அந்தப் பிறப்பாகிய ஸிம்மஸேன வரசன்பவ முதற்கொண்டு,
இன்றுகாறும் - இன்றைய வரையிலும், வந்தனம் - சேர்ந்து பிறந்து
வராநின்றோம், உரகர்கோவே - தரணேந்திரனே!, ஒன்றும் -
அச்சங்கதிகளிலொன்றும், எஞ்சாமை - குறைவில்லாமல்,
உரைக்கின்றேன் - யான் சொல்லுகிறேன், நீ - நீ, கேள் -
கேட்பாயாக, (என்று ஆதித்யாபதேவன் கூறத்தொடங்கினான்), எ - று.
____________________
இரண்டாவது :
சஞ்சயந்தன் முத்திச்சருக்கம் முற்றுப்பெற்றது. |